"மகளிர் ஒவ்வொருவரும் தமது உரிமைகளை போராடித்தான் பெற்று வந்துள்ளார்கள். இந்தப் போராட்டம் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை" என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

"நாடும் தேசமும் உலகமும் அவளே" எனும் தொனிப்பொருளில் இவ் வருட சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் "சர்வதேச மகளிர் தினம் மற்றும் யாழ். மாவட்ட பெண்கள் தொழில் முயற்சியாளர்களது உற்பத்திப்பொருள் கண்காட்சியும் விற்பனையும்" நிகழ்வு இன்று (08.03.2021) காலை 9 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.


இந் நிகழ்வில் பிரம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்கள் "மகளிர் ஒவ்வொருவரும் தமது உரிமைகளை போராடித்தான் பெற்று வந்துள்ளார்கள். இந்தப் போராட்டம் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை. ஒவ்வொரு மூன்று பெண்களுக்கு ஒருவர் ஏதோவொரு வகையில் துஷ்பிரயோகத்திற்கு அல்லது அவமானப்படுத்தலிற்கு உள்ளாகின்றார்கள்" என தெரிவித்துள்ளார்.

மேலும் " சர்வதேசத்தில் பெண்களுடைய எண்ணிக்கைகேற்ப அவர்களுடைய உரிமைகள், செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் காணப்படுகிறது. ஆரம்பத்தில் வாக்குரிமையை கூட போராடித்தான் பெற வேண்டியதாகயிருந்தது. இந்த நிலமை 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் முதலாம் உலகப்போரிற்கு முன்னதாக அங்கு தொழில் புரியும் பெண்கள் தமது வேலை, நேரம், இதர வசதிகளிற்காக 1908 ஆம் ஆண்டு நியுயோர்க் நகரில் மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாக 1911 இல் சில நாடுகள் சேர்ந்து சர்வதேச மகளிர் தினத்தை அனுஷ்டித்தனர். அதன் பின் சர்வதேச மகளிர் தினத்தை ஐக்கிய நாடுகள் சபை 1975 ஆம் ஆண்டு அங்கீகரித்ததை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் எட்டாம் திகதி சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை உலகில் 60 வீதமான பெண்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படாத வகையில் காணப்படுகிறது. அவர்களுக்கான  ஊதியம் , சேமிப்பு குறைவானதாக காணப்படுவதோடு அபாயம் அதிகளவானதாக காணப்படுகிறது. பெண்கள் குடும்பம், வறுமை மற்றும் தமது இருப்பிற்காக போராட வேண்டிய நிலை காணப்படுகிறது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்கள் 52 வீதமாக காணப்படுகிறார்கள். அரசாங்கம் பலதரப்பட்ட உரிமைகளை பெண்களிற்கு வழங்கியிருந்தாலும் பெண்களுடைய வகிபங்கு சரியான அங்கீகாரத்திற்கு உட்படுத்தப்படவில்லை அவர்கள் பல்வேறு உளவியல் தாக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும் பெண்களுடைய வகிபங்கு சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதனை ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். ஆண்களும் பெண்களும் சமமானவர்கள் என்ற எண்ணக்கரு வலுவடைய வேண்டும்.

அத்துடன் பெண்களுக்கு எதிரான ஏற்றத் தாழ்வுகள், வன்முறைகள் ஒழிக்கப்பட வேண்டும். அவர்களுடைய உழைப்பு மதிக்கப்படுவதோடு அவர்களுடைய உழைப்புக்கான பெறுமதி வழங்கப்படுதல் வேண்டும்.

மேலும் இன்று காட்சிப்படுத்தப்பட்ட உற்பத்திகள் தரம் வாய்ந்ததாக காணப்படுகிறது. சிலர் உற்பத்தியின் தரத்தில் கவனம் செலுத்துதல் வேண்டும். எமது மேலதிக அரசாங்க அதிபர் குறிப்பிட்டது போல உற்பத்தியாளர்கள் மாதத்தில் ஒரு தடவை மாவட்ட செயலகத்தில் தமது உற்பத்திகளை காட்சிப்படுத்துவதன் மூலம் விற்பனை செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படுமெனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்டசெயலக பிரதம கணக்காளர், உதவி மாவட்டச்செயலாளர், மாவட்ட செயலக பதவி உத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பிரதிநிதித்துவம் செய்யும் மகளிர் அமைப்புகள் மற்றும் உற்பத்தியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

           5    6    7                 8    9    11