04Maruladyhouse2

மருதங்கேணி பெண்கள் பாதுகாப்பு இல்லம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்களின் தலைமையில் இன்று (04) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் கடந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம், 2021இற்கு தேவையான மேலதிக நிதி தேவைப்பாடுகள், 2022 இற்கான நிதி ஏற்பாடுகள், கொள்கை ரீதியாக மேற்கொள்ளப்படவேண்டிய சில ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் சமூக பிரச்சினைகளான வறுமை, போதைவஸ்துப் பாவனை போன்றன அதிகரித்துக் காணப்படுகின்றது அதன் காரணமாக குடும்ப உறவுகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் தேவைகளை இனங்கண்டு அவர்களுக்கு தேவையான உளவள ஆலோசனை வழங்கி சமூகத்துடன் இணைக்க தொடர்புடைய பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

அத்தோடு, இங்கு கருத்து தெரிவித்த மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் , பிரதேச செயலர் பிரிவில் உள்ள பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அறிக்கையிடும் பிரச்சினை தொடர்பாக தொடர்புடைய தரப்பினரையும் இணைத்து ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஆலோசனை வழங்கினார். மேலும் தை மாதம் தொடக்கம் ஆவணி மாதம் வரையிலான அறிக்கையை மாவட்ட செயலகத்திற்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்தார். மேலும் பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர்கள்

அனைவரும் ஒன்றிணைந்து விழிப்புடன் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் , உதவி மாவட்ட செயலாளர், பிரதம கணக்காளர், மருதங்கேணி பிரதேச செயலாளர், மாவட்ட செயல மற்றும் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸ் தரப்பினர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி துறைசார் தரப்பினரும் கலந்து கொண்டனர்.

 

             04Maruladyhouse1   04Maruladyhouse3