உணவு ஆணையாளர் திணைக்களத்தினூடாக அதேநேரம் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அவர்கள் இணைந்த வகையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பொதுமக்களுக்கு தடையின்றி நியாயமான விலையில் விற்பனை செய்வதற்குரிய ஏற்பாடுகள் மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், 2020 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2243/ 3 இற்கு இணங்க சோதனை, அறிவூட்டல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட பொறுப்பதிகாரியின் மேற்பார்வையின் கீழ் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 
அதற்கமைவாக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சீரான விலையில் தட்டுப்பாடின்றி கிடைப்பதனை உறுதிப்படுத்தும் முகமாக ஏற்கனவே யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றும் பட்டதாரி பயிலுநர்கள் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் மாவட்ட பொறுப்பதிகாரியின் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் குறித்த கடமைகளுக்காக இன்றிலிருந்து இணைக்கப்பட்டுள்ளனர். 
குறித்த வழிகாட்டல் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்களின் தலைமையில் சுகாதார நடைமுறைகளுக்கமைவாக இன்றைய தினம் (07.09.2021) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப் பணிப்பாளர் மற்றும் மாவட்ட மட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்கள் தெரிவிக்கையில் , யாழ்மாவட்டத்தில்  தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என  கண்காணிப்பதற்கு  ஏற்பாடுகள் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.
 
மேலும், பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவோர்  மற்றும் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட அதிகபட்ச கட்டுப்பாட்டு விலையை விட அ‌திக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர் பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் கள உத்தியோகத்தர்கள் ஊடாக கண்காணித்து சட்டவிரோத வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்கள் மீது சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நடமாடும் வெதுப்பக உணவுப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மற்றும் கிராமப்புறங்களில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் ஆகியோரும் இது தொடர்பில் அரசாங்கங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கமைய நியாயமான விலையில் நுகர்வோருக்கு பொருட்கள் கிடைப்பதனை உறுதிப்படுத்தல் அவசியமானதாகும்.
அந்தவகையில் ,பொருட்கள் விநியோகத்தினை  தங்குதடையின்றி மேற்கொள்வதற்குரிய சகலவிதமான வசதிகளையும் அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. எனவே வியாபாரிகள் பொருட்களை பாதுகாத்து நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.