திரு. என். வேதநாயகன் அவர்கள், யாழ் மாவட்டத்தின் அரச அதிபர் மற்றும் மாவட்டச் செயலாளர்
 38

திரு. என். வேதநாயகன் அவர்கள் யாழ் மாவட்டத்தின் அரச அதிபர் மற்றும் மாவட்டச் செயலாளராக 25.03.2015ம் திகதி அன்று பதவி ஏற்றுக்கொண்டார். இவர் 1991ம் ஆண்டு நெடுந்தீவில் உதவி அரச அதிபராக தனது அரச நிர்வாக சேவையை ஆரம்பித்து 2007ம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்திற்கு அரசாங்க அதிபர் மற்றும் மாவட்டச் செயலாளராகப் பதவி உயர்ந்தார்.

1993ம் ஆண்டு தெல்லிப்பளை பிரதே செயலாளராகப் பதவி உயர்வு பெற்று பின்னர் 1996ம் ஆண்டு சண்டிலிப்பாய்ப்  பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றார். 2003ம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராகப்  பதவி உயர்வு பெற்று செல்லும் வரை சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகத்தில்  கடமையாற்றினார். பின்னர் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுடன் ​இணைக்கப்பட்டார்.

போர் சூழலில் நெருக்கடிமிக்க பிரதேசங்களில் அதாவது கிளிநொச்சி மாவட்டத்தில் 2 வருடங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 மாதங்களும் மன்னார் மாவட்டத்தில் 10 மாதங்களும் பின்னர்  முல்லைத்தீவு மாவட்டத்திலும் அரச அதிபராகப் கடமையாற்றிய அனுபவத்தின் பின்னர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்றார்.

அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மற்றும் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவரான இவர்  தனது விஞ்ஞானமானிப் பட்டப்படிப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பின்னர் பொது நிர்வாகத்தில்  முதுமாணி பட்டப்படிப்பை ஜெயவர்த்தனபுரப் பல்கலைக் கழகத்திலும் நிறைவு செய்தார்.

27ம் திகதி வைகாசி மாதம் 1960ம் ஆண்டு பிறந்த இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர்.

அரச ஊழியர்கள் ஊழல், மோசடி, இலஞ்சம்  இன்றி, பொறுப்பாக, குழுக்களாக, உயிர்ப்புடன், ஆத்மார்த்தமாக, பொது மக்களுக்கு அர்ப்பணிப்பு மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் கடமையாற்ற வேண்டும் என்பதை நோக்காக கொண்டுள்ளார்.