ஆவணங்களை விரைவாக பதிவு செய்யும் ஒரு நாள் வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு

மேற்படி நிகழ்வானது இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களினதும் பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களினதும் ஆலோனையின் கீழ் உள்ளக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்த்தன அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு பதிவாளர் நாயகம் கலாநிதி என்.சி.விதானகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் நாடு முழுவதுமுள்ள காணிப்பதிவகங்களில் 2019.03.16 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

இதன் ஓர் அங்கமாக, வடக்கு மாகாணத்திற்குரிய ஆரம்ப நிகழ்வானது யாழ் மாவட்டச் செயலக வளாகத்திலுள்ள காணி மாவட்டப்பதிவகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

மங்களவாத்தியங்கள் முழங்க அரச அதிபர் அழைத்து வரப்பட்டு யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர்கள், திணைக்களத்லைவர்கள், சட்டத்தரணிகள், பிரசித்தநொத்தாரிசுகள், திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் சமூகமாகியிருக்க இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு வலய உதவிப்பதிவாளர் நாயகம் திரு.க.நடராசா அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற​ நீதிபதியும் சட்டத்தரணியுமாகிய திருமதி சறோஜினிதேவி இளங்கோவன் அவர்கள் சிறப்புரை ஆற்றியதுடன், அரசாங்க அதிபர் அவர்கள் பிரதம அதிதி உரையாற்றிச் சிறப்பித்தார்கள்.

தொடர்ந்து மாவட்டச்செயலக வளாகத்திலுள்ள காணி மாவட்டப்பதிவகத்தில் யாவரும் குழுமியிருக்க அரசாங்க அதிபர் அவர்களால் சம்பிரதாய பூர்வமாக இந்நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதன் போது சட்டத்தரணியும் பிரசித்நொத்தாரிசுகளுமான திரு.J.ஜெகரூபன் , திரு. J.S.A.மதுரநாயகம், மற்றும் பிரசித்த நொத்தாரிசு திரு.சி.இளங்கீரன் ஆகியோர் ஒரு நாள் சேவை வாயிலாக மூல உறுதிகளை பதிவுக்காக சமர்ப்பித்தனர்.

இவ்வாறு அவர்களால் வழங்கப்பட்ட  உறுதிகள் காணிப்பதிவக உத்தயோகத்தர்களால் உடனடியாகவே பதிவுசெய்யப்பட்டு பிரதம அதிதியாக கலந்துகொண்ட அரசஅதிபரின் கரங்களால் உரிய சேவை பெறுநர்களுக்கு சிறிது நேரத்திலேயே மீளக்கையளிக்கப்பட்டது.

நிறைவாக மாவட்டச்செயலக வளாகத்தில் இந்நிகழ்வின் ஞாபகார்த்தமாக, மாவட்ட அரசஅதிபரால் பலாமரக்கன்று நாட்டி வைக்கப்பட்டது. ஒரு நாளில் மூல உறுதிகளை பதிவு செய்யும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்மை குறித்து பலரும் மகிழ்ச்சி தெரிவித்ததுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவேறியது.