“சமூக பலத்திற்கு புதியதோர் பலம்” எனும் தொனிப்பொருளிலான வட மாகாண சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான விழிப்பூட்டல் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று(27.10.2026) யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபமொன்றில் காலை 9.00மணிக்கு நடைபெற்றது. சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக முத்துகல தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் கெளரவ வசந்த பியதிஸ்ஸ பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணாநாதன் இளங்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசாங்க அதிபர் அவர்களின் வரவேற்புரை :
இன்றைய நிகழ்விற்கு வருகை தந்த
கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்ட பிரதி அமைச்சர் கௌரவ வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணநாதன் இளங்குமரன் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன், சமுர்த்தித் திட்டத்தைத் தேசிய ரீதியில் முன்னெடுத்துச் செல்லும் செயற்பாடுகளுடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பொருளாதார வலிமையை அதிகரிப்பது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும் எனவும், நாம் அனைவரும் ஒற்றுமையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவதன் மூலம், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனங்களுக்கு அமைவாக இச்செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார். அந்த வகையில், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் இங்கு ஒன்றுகூடியிருப்பது, வடக்கு மாகாணத்தைப் பொருளாதார வலிமை மிக்க மாகாணமாகக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளமாக அமைகின்றது. இன்றைய நிகழ்வை ஏற்பாடு செய்த கௌரவ பிரதி அமைச்சருக்கும், சமுர்த்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கும் தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். சமுர்த்தி தொடர்பான செயற்பாடுகளில் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களும் கடந்த காலங்களில் முன்னிலை வகித்துள்ளன. உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான சேவையின் மூலம் பல்வேறு விருதுகளையும் எமது மாவட்டங்கள் பெற்றுள்ளன. உத்தியோகத்தர்களின் திறமையான, அர்ப்பணிப்புமிக்க பங்களிப்பே இவ்வெற்றிகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
இந்த வெற்றிகளை உத்தியோகத்தர்களுக்கு மட்டுமே உரித்தான வெற்றிகளாகக் கருத முடியாது. ஏனெனில், அவர்கள் ஆற்றிய பணிகளின் ஊடாகப் பல சாதாரண மக்களும் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதற்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் எனவே, எமது மாவட்டங்களின் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் கடமையாற்றி வருகின்றனர் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்வதாக த் தெரிவித்தார். இன்றைய நிகழ்வு உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளுக்கு மேலும் வலுச்சேர்ப்பதுடன், அவர்களின் ஆற்றல்களையும் திறன்களையும் மேம்படுத்தும் ஒரு வாய்ப்பாக அமையும் எனவும், அதேவேளை, அவர்கள் சேவையாற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதார நிலையையும் வலுப்படுத்துவதற்கும் இந்நிகழ்வு பங்களிப்புச் செய்யும் என எதிர்பார்ப்பதாகவும், அரசாங்கத்தின் இலக்குகளுக்கும் கொள்கைகளுக்கும் அமைவாக, சமுர்த்தி சார்ந்த செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என தெரிவித்தார்.
வலுவூட்டல் கருத்துரைகள் :
சமுர்த்தி வேலைத்திட்டத்தின் சமூக அடிப்படையிலான செயற்பாடுகள், வங்கிக் கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் தொடர்பான விடயங்கள் குறித்து சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் லால் கருணாதிலக உரையாற்றினார். தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணாநாதன் இளங்குமரன் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலாசார நிகழ்வுகளுடன், பிரதம விருந்தினரான பிரதி அமைச்சர் கெளரவ. வசந்த பியதிஸ்ஸவின் சிறப்புரையும் இடம்பெற்றது. மேலும், “சமூக பலத்திற்கு புதியதோர் பலம்” என்ற தொனிப்பொருளின் கீழ், சமுர்த்தி வேலைத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் சமூக வலுவூட்டல் தொடர்பான கருத்துரையும் வழங்கப்பட்டது. சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் பொன்னம்பலம் ஸ்ரீவர்ணன் நன்றியுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நிகழ்வு நிறைவடைந்தது. இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர்கள், ஐந்து மாவட்டங்களின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.








