யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உளநல தின நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கை.சிவகரன் தலைமையில் இன்றைய தினம்(29.10.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
முதன்மை விருந்தினர்கள் :
இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உளவியல் மருத்துவ நிபுணர் சி.சிவதாஸ், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் ஓய்வுநிலை பிரதம கணக்காளர் கில்பேட் குணம் மற்றும் கோப்பாய் Crafttary நிறுவனத்தின் இயக்குநர் த. சுரேஸ்குமார் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
வரவேற்பும் தலைமையுரையும் :
நிகழ்வில் முதன்மை விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்டச் செயலக உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்ஷினி வரவேற்புரையாற்றினார். வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து, நிகழ்வின் தலைமையுரையை மேலதிக அரசாங்க அதிபர் கை.சிவகரன் நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து, கலைநிகழ்வுகளுக்கு இடையிடையே முதன்மை விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றன.
அரசாங்க அதிபர் உரை :
யாழ்ப்பாண மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மிகச்சிறந்த திறன்களைக் கொண்ட கலைஞர்களாகத் திகழ்வதைக் கண்டு உண்மையிலேயே மகிழ்ச்சியடைவதுடன், பெருமிதமும் அடைவதாக அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்தார்.குறிப்பாக, பார்வையற்றவர்களுக்கான தேசிய மட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற செல்வி ரெ. கீர்த்தனா அவர்கள் பாடிய பாடல் சிறந்த சங்கீத ஞானத்தையும் திறமையையும் வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டார். அதேபோன்று, தேசிய மட்டப் போட்டியில் ஐந்தாம் இடத்தைப் பெற்ற திரு. கு. ஜெகதீசன் அவர்கள் பாடிய திரைப்படப் பாடல், அந்தத் திரைப்படத்தின் காட்சிகளை மனக்கண் முன் கொண்டுவரும் வகையில் அமைந்திருந்ததாகவும் பாராட்டினார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவட்டப் பண்பாட்டுப் பெருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், மாற்றுத்திறனாளிகளின் கலைத் திறன்களை வெளிப்படுத்துவதற்கும் அவர்களைச் சமூகத்தில் மேலும் ஊக்குவிப்பதற்கும் தனியான மாவட்டப் பண்பாட்டுப் பெருவிழாவொன்றை ஏன் நடத்தக்கூடாது என்ற சிந்தனை தமக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதற்கமைய, 2027ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பண்பாட்டுப் பெருவிழாவொன்றை நடத்துவதற்கான யோசனையை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டார். மாற்றுத்திறனாளிகள் தமது சவால்களைத் தாண்டி, அர்ப்பணிப்புடனும் கடமை உணர்வுடனும் வாழ்ந்து தமது திறமைகளை வெளிப்படுத்தி வருவதாகவும், பிரதேச செயலாளர்கள் மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் இவ்விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்ய முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். இன்றைய நிகழ்வில் முதியோர்களும் மாற்றுத்திறனாளிகளும் தமது தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தியமை பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்ட அவர், நிகழ்வின் மூன்று பிரிவுகளுக்கும் பொருத்தமான விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தமையைச் சிறப்பாக எடுத்துரைத்தார். முதியோர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற திரு. கில்பேட் குணம் அவர்களும், மாற்றுத்திறனாளிகள் தினத்தின் நோக்கத்தையும் மாற்றுத்திறனாளிகள் தமது வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி முன்னேறுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் வகையில் தொழில்முயற்சியாளராக முன்னுதாரணமாகத் திகழும் திரு. த. சுரேஸ்குமார் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும் என்றார். அத்துடன், உளவைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி சி. சிவதாஸ் அவர்கள் உள்ளார்ந்த அர்த்தமுள்ள கருத்துக்களை முன்வைத்தமையையும் பாராட்டினார்.
கலை நிகழ்ச்சிகள் :
முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்தினரின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தெல்லிப்பளை முதியோர் சங்க உறுப்பினர் பி. பரமசோதி, யாழ்ப்பாணப் பிரதேச செயலக சுயஉதவிக் குழுவினர், தேசிய மட்டப் போட்டியில் சாதனை படைத்த பார்வையற்ற கலைஞர்களான ரெ. கீர்த்தனா மற்றும் கு. ஜெகதீசன், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தெல்லிப்பளை பிரதேச மட்ட முதியோர் சங்கத்தினர், தி. ஜேசுவா சால்மன் ஆகியோரின் தனிப்பாடல்கள், குழு நடனங்கள் மற்றும் நாடகம் ஆகியன நிகழ்வைச் சிறப்பித்தன.
தேசிய மட்டத்தில் சாதனை படைத்தவர்களுக்குக் கௌரவம் :
பார்வையற்றவர்களுக்கான 'ஸ்வர மஞ்சரி' தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றி இரண்டாம் இடத்தைப் பெற்ற ரெ. கீர்த்தனா மற்றும் ஐந்தாம் இடத்தைப் பெற்ற கு. ஜெகதீசன் ஆகியோர் மாவட்ட அரசாங்க அதிபர், முதன்மை விருந்தினர்கள் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்களால் கௌரவிக்கப்பட்டுப் பரிசில்களும் வழங்கப்பட்டன. சமூக சேவைகள் திணைக்களத்தின் செயலாற்றுகையில் சிறந்த உத்தியோகத்தர்களுக்குப் பாராட்டு சமூக சேவைகள் திணைக்களத்தின் 2025ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை மதிப்பீட்டில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற உத்தியோகத்தர்களுக்கும் இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதன்படி, முதலாம் இடத்தைப் பெற்ற கோப்பாய் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த திருமதி வி. கிருசாந்தி, இரண்டாம் இடத்தைப் பெற்ற காரைநகர் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகங்களைச் சேர்ந்த திருமதி சி. குயிலினி மற்றும் திருமதி வி. நிவேதனா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வின் நன்றியுரையை உளவளத்துணை உத்தியோகத்தர் திருமதி சிந்துஜா நிகழ்த்தினார். இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், மாவட்டச் செயலகப் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள், முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.








