“தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய தூய்மைப்படுத்தல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான மூன்றாவது மாவட்ட வேலைத்திட்டம் இன்றைய தினம் (31.10.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணநாதன் இளங்குமரன் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் “தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) திட்டத்தின் மேலதிக பணிப்பாளர் திரு. நிஷாந்த ஆல்வின் ஆகியோர் கலந்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் “அத்தம” நிகழ்ச்சித்திட்டத்தின் அக்டோபர் மாதத்திற்கான மாவட்ட நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் காலை 8.00மணிக்கு ஆரம்பமாகி, கச்சேரி–நல்லூர் வீதி, முத்திரைச் சந்தி வீதி வரையான J/76, J/77, J/91, J/92, மற்றும் J/109 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் வீதிச் சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் இவ்வேலைத்திட்டம் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது. “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் “அத்தம” தேசிய தூய்மைப்படுத்தல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் மூன்றாவது கட்டம் இன்றையதினம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய, நாடளாவிய ரீதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை மையமாகக் கொண்டு, ஒவ்வொரு கிராமத்தின் பொதுவான தேவைகளை இனங்கண்டு அவற்றுக்குத் தீர்வு காணும் நோக்கில் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் கீழ் கிராமப்புற வீதிகளைத் தூய்மைப்படுத்துதல், கைவிடப்பட்டுள்ள பொதுக் கிணறுகளை மீளப் பயன்படுத்தக்கூடிய வகையில் புனரமைத்தல் மற்றும் பிரதேசங்களின் தேவைகளுக்கு ஏற்ப விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
நோக்கம் :
பொதுப் பணிகளுக்காக மக்களின் சிரமதானப் பங்களிப்பைப் பெற்றுக்கொண்டு, சமூகத்தின் பிரச்சினைகளுக்குக் கூட்டாகத் தீர்வு காணும் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதே இவ்வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இதன்போது வீதிகள் தூய்மைப்படுத்தப்பட்டதுடன், பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பொது இடங்களைத் தொடர்ச்சியாகத் தூய்மையாகப் பேணுவதன் அவசியத்தை உணர்த்துவதற்கும் இந்நிகழ்வு முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது.
அரசாங்க அதிபரின் தலைமையுரை :
நிகழ்வில் தலைமை உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், “அத்தம” நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக பிரதேச மற்றும் கிராம மட்டங்களில் தூய்மையான சூழலை உருவாக்கும் நோக்கில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். நிகழ்வில் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் பங்கேற்ற கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்ற அவர், அவர்களின் பங்களிப்புக்குத் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டு, ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு “கிளீன் ஸ்ரீலங்கா” செயற்றிட்டங்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் மாவட்டத்தை தூய்மையானதும், பசுமையானதும், பாதுகாப்பானதுமான சூழலைக் கொண்ட மாவட்டமாக உருவாக்குவதன் மூலம் அதன் சகல துறைகளிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவித்த அரசாங்க அதிபர், “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “அத்தம” நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் உரை :
மக்களின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் தூய்மையான நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் – கெளரவ க. இளங்குமரன் நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணநாதன் இளங்குமரன் அவர்கள், ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய “அத்தம” வேலைத்திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ஒவ்வொரு மாதத்தின் இறுதி சனிக்கிழமையையும் தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கி, நாடளாவிய ரீதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சுற்றுச்சூழல் தொடர்பான மக்களின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை அழகானதும் தூய்மையானதுமான நாடாக மாற்ற முடியும் எனத் தெரிவித்த அவர், ஒவ்வொரு பொதுமக்களும் குப்பைகளை வீதிகளிலும் பொது இடங்களிலும் வீசாமல், அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட பொருத்தமான இடங்களில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஒரு கிராமத்தின் சூழலை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட “அத்தம” வேலைத்திட்டம் இன்று நாடு முழுவதும் மக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தூய்மையான சூழலை உருவாக்கும் இப்பயணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான ஒருங்கிணைந்த செயற்பாடுகளின் மூலம் மகிழ்ச்சியானதும், அழகானதுமான நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கலந்துகொண்டவர்கள் :
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) உள்ளிட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள், மாநகர சபை ஆணையாளர், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர், சாரணர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், துரறசார் திணைக்கள உத்தியோகத்தர்கள், இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்ட உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.
 
1 2 3 5 5 6 7 8 10 12 9 27 29 30 31 25