சிவில் சமூக அமைப்புகளின் செயற்பாடுகளை முன்னேற்றுவதன் மூலம் கொள்கை ஊக்குவித்தல் மற்றும் உரிமைகளைப் பாதுகாத்தல் (CATALYZE) நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாண மாவட்டப் பங்குதாரர்களுக்கான வழிகாட்டல் கலந்துரையாடல் கிரிசலிஸ் (Chrysalis) நிறுவனத்தின் பிராந்திய மற்றும் திட்ட முகாமையாளர் திரு. எம். பிரபாகரன் தலைமையில், இன்றைய தினம் (28.10.2026) தனியார் மண்டபமொன்றில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
திட்டத்தின் நோக்கம் :
இலங்கையின் சமூகங்களில், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், அர்த்தமுள்ளதும் நீண்டகாலத்திற்குப் பயனளிக்கக்கூடியதுமான மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நிலம், வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான உரிமைகள் சார்ந்த சவால்களுக்குக் கூட்டு நடவடிக்கைகள், பங்கேற்பு அடிப்படையிலான ஆளுகை மற்றும் கொள்கை மாற்றங்கள் ஊடாக நிலையான தீர்வுகளை உருவாக்குவதற்கு சமூகங்களையும் சிவில் சமூக அமைப்புகளையும் வலுப்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
வரவேற்புரை :
கிரிசலிஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ஏ. அஜந்தன் வரவேற்புரையாற்றினார்.
அரசாங்க அதிபர் உரை :
யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசாங்கத்தின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில், அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச நிர்வாகம் மற்றும் சமூக மட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டில் அரச சார்பற்ற நிறுவனங்களால் சுமார் 1,005 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடாகச் சுமார் 4,500 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாவட்டத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தியில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியமானது எனக் குறிப்பிட்ட அவர், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களில் காணப்படும் இடைவெளிகளைக் குறைப்பதற்கு இந்நிறுவனங்களின் வளங்களையும் ஒத்துழைப்பையும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகளின் பயன்களை மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார். பசுக்கள், கோழிக்குஞ்சுகள் மற்றும் தையல் இயந்திரங்கள் போன்ற உதவிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவற்றின் மூலம் நிலையான உற்பத்தி அதிகரிப்பு மற்றும் பொருளாதாரத் தன்னிறைவு எந்தளவுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், மக்களின் வாழ்வாதாரத்தை நிலையான முறையில் மேம்படுத்துவதற்கும் மாவட்டச் செயலகமும் பிரதேச செயலகங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். Chrysalis நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட 'ஊராட்சி முற்றம்' திட்டத்திற்காக 6.6 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டு, 160 மில்லியன் ரூபாய் பெறுமதியான அடைவு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், இத்திட்டத்தை முன்னெடுப்பதில் குடிசார் அமைப்புகள் ஆற்றிய பங்களிப்பையும் பாராட்டினார். காணி, வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய மூன்று முக்கிய துறைகளையும் மையப்படுத்தி, சமூக மட்ட அமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார். எனவே, அரச உத்தியோகத்தர்கள் தமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளையும் வளங்களையும் உரிய முறையில் பயன்படுத்தி, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் ஒத்துழைப்புடன் மக்களுக்குப் பயனளிக்கும் நிலையான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் வலியுறுத்தினார். அத்துடன், மக்களின் பிரச்சினைகளை உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டுசென்று, நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை உருவாக்குவதில் சிவில் சமூக அமைப்புகளின் பங்களிப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
திட்டத்தின் விளக்கவுரை :
திட்டத்தின் நோக்கங்கள், செயற்பாடுகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள் தொடர்பான விரிவான விளக்கத்தைத் திட்ட மற்றும் பிரதேச முகாமையாளர் திரு. எம். பிரபாகரன் காட்சிப்படுத்தல் மூலம் வழங்கினார்.
கலந்துரையாடல் :
தொடர்ந்து, கிரிசலிஸ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களிலிருந்து பெறப்பட்ட சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்கள் பகிரப்பட்டதுடன், மாவட்ட மட்டத்தில் தொடர்புடைய துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலின் ஆரம்ப நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கை. சிவகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்ஷினி, அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர் நா. தயாபரன், உதவிப் பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மாகாண கால்நடை சுகாதார வைத்தியப் பணிப்பாளர், பல்வேறு திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.








