32 ஆண்டுகால அரச சேவையிலிருந்து 01.11.2026 அன்று இளைப்பாறும் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. சுப்பிரமணியம் சிவகுமாரன் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா மற்றும் பிரியாவிடை நிகழ்வு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (30.10.2026) பி. ப. 02.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
திரு. சுப்பிரமணியம் சிவகுமாரன் அவர்களின் அரச சேவைப் பயணம் :
பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. சுப்பிரமணியம் சிவகுமாரன் அவர்கள், 1994ஆம் ஆண்டு அபிவிருத்தி உத்தியோகத்தராக அரச சேவையில் இணைந்து, மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றி வந்த நிலையில், 2009ஆம் ஆண்டு உதவித் திட்டமிடல் பணிப்பாளராகப் பதவியுயர்வு பெற்று, உடுவில், தெல்லிப்பழை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலகங்களில் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, 28.04.2021 முதல் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராகப் பதவியேற்று, தனது கடமைகளைச் சிறப்பாக முன்னெடுத்து வந்த அவர், எதிர்வரும் 01.11.2026 அன்று 32 ஆண்டுகால அரச சேவையை நிறைவு செய்து ஓய்வுபெறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரவேற்புரையும் தலமையுரையும் :
இந் நிகழ்வில் வரவேற்புரையினை பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன் அவர்களால் ஆற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைமையுரை மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களால் ஆற்றப்பட்டது.
அரசாங்க அதிபர் அவர்களின் வாழ்த்துரை :
யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும், திட்டமிடல் பணிகளுக்கும் அர்ப்பணிப்புடன் பங்களிப்புச் செய்த பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. சிவகுமார் அவர்களின் 32 ஆண்டுகால அரச சேவை பாராட்டத்தக்கதென யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். திரு. சிவகுமார் அவர்களின் பணியைப் பற்றிச் சிந்திக்கும்போது, அவருக்கு ஒப்படைக்கப்பட்ட வேலையைச் சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியான விருப்பம் அவரிடம் இருப்பதை நான் அவதானித்திருக்கின்றேன். ஒரு வேலையைச் செய்வதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, மற்றவர்களைக் கொண்டு அந்த வேலையைச் செய்விப்பது. மற்றொன்று, அந்த வேலையைத் தானே பொறுப்பேற்று நிறைவேற்றுவது. சில வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பதைவிட, தானே பொறுப்பேற்று முடித்துவிடுவது சிறந்தது என்று அவர் கருதுகின்ற சந்தர்ப்பங்கள் இருந்திருக்கலாம். குறிப்பாக, நுணுக்கமான விடயங்களைக் கையாள வேண்டியபோது, அவற்றைத் தானே கவனித்து முடிக்க வேண்டும் என்ற மனப்பாங்கு அவரிடம் காணப்பட்டது. அதனால், சில வேளைகளில் அவருக்கான வேலைப்பளு அதிகரித்திருக்கக்கூடும். இருப்பினும், ஒப்படைக்கப்பட்ட பொறுப்பைச் சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும் என்ற அவருடைய அர்ப்பணிப்பே இதற்குக் காரணமாக இருந்தது என நான் கருதுகின்றேன். தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைத் துல்லியமாகவும் பொறுப்புடனும் நிறைவேற்றுவதில் அவர் தனித்துவமான ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான தகவல்களைச் சேகரித்தல், அவற்றை முறைப்படுத்துதல் மற்றும் உரிய நேரத்தில் சமர்ப்பித்தல் ஆகியவற்றில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாண்டு பிரஜா சக்தி வேலைத் திட்டத்திற்காக மாவட்டத்திற்குக் கிடைத்த 651 மில்லியன் ரூபாய் நிதியைக் குறித்த திட்டத்தின் கீழ் முழுமையாகப் பயன்படுத்துவதற்குத் தேவையான அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதிலும், திட்டங்களை உரிய முறையில் முன்னெடுப்பதிலும் அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார். எமது மாவட்டத்திற்குக் கிடைத்த 651 மில்லியன் ரூபாய் நிதியும் உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்,அதில் ஒரு பகுதியேனும் பயன்படுத்தப்படாமல் திரும்பிச் செல்லக்கூடாது என்ற நோக்கத்துடன் அவர் செயற்பட்டார். மேலும், அபிவிருத்தி திட்டங்களுக்கு கிடைக்கும் நிதியில் ஒரு ரூபாய்கூட வீணாகக்கூடாது, மாவட்டத்திற்குக் கிடைத்த நிதியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் செயற்பட்டார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வீதிகள் தொடர்பான தகவல்களைத் திரட்டி, அவற்றை வகைப்படுத்தி, முழுமையான ஆவணமாகத் தொகுத்து வழங்கியமை அவரது பணித்திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பதற்கும், வளங்களைச் சரியான முறையில் பயன்படுத்துவதற்கும் நம்பகமான புள்ளிவிபரங்கள் அவசியமானவை எனக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், இத்தகைய தகவல்களைத் துல்லியமாகப் பெற்றுக்கொள்வதில் திரு. சிவகுமார் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். ஒரு தகவல் கோரப்படும்போது, அந்தத் தகவலை மட்டும் பெற்றுக்கொள்வதுடன் நின்றுவிடாமல், அதனுடன் தொடர்புடைய ஏனைய தகவல்களையும் ஒரே தடவையில் தொகுத்து வழங்குவதற்கு அவர் முயற்சிப்பார். இதனால், திட்டமிடல் பணிகளுக்குத் தேவையான தகவல்களைத் துல்லியமாகவும் முழுமையாகவும் பெற்றுக்கொள்ள முடிந்தது. உண்மையில், தரவுகளின் அடிப்படையில்தான் அபிவிருத்தித் திட்டங்களைத் திட்டமிடவும், முன்னுரிமைகளைத் தீர்மானிக்கவும், வளங்களைச் சரியான முறையில் ஒதுக்கவும் முடியும். அந்த வகையில், திட்டமிடல் சேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட்ட உத்தியோகத்தராகத் திரு. சிவகுமார் அவர்கள் விளங்குகின்றார். முன்னாள் அரசாங்க அதிபர் அமரர் கணேஷ் அவர்கள் கடமையாற்றிய காலத்தில், நானும் திரு. சிவகுமார் அவர்களும் இணைந்து பணியாற்றிய அனுபவம் எனக்குள்ளது. அந்தக் காலப்பகுதி யுத்தம் காரணமாக மிகவும் சவாலானதாக இருந்தது. பல்வேறு தரப்பினருடனான தொடர்புகளைப் பேணுவதிலும், மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதிலும் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. யுத்தம் முடிவடைந்த பின்னரும் சுனாமி அனர்த்தம், மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றுதல் போன்ற சவால்கள் காணப்பட்டன. இத்தகைய கடினமான காலப்பகுதிகளிலும் திரு. சிவகுமார் அவர்கள் மாவட்டச் செயலகத்திலும் பிரதேசச் செயலகங்களிலும் தனது பணிகளைத் தொடர்ந்து ஆற்றியுள்ளார். பல அரசாங்க அதிபர்களின் கீழ் பணியாற்றிய அனுபவத்துடன், மாவட்டத்தின் அபிவிருத்தித் தேவைகளையும் நிர்வாகச் சவால்களையும் புரிந்துகொண்டு அவர் செயற்பட்டுள்ளார். திட்டமிடல் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு, அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்த விதம், தரவுகளைத் துல்லியமாகக் கையாளும் திறமை, நிதியை உரிய முறையில் பயன்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தனது கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றியமை ஆகியவை என்றும் பாராட்டத்தக்கவையாகும். அவரது ஓய்வுக்காலம் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் மனநிறைவும் நிறைந்ததாக அமைய வேண்டும். தனது துணைவியார், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து இனிவரும் காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்கவும், எதிர்காலச் செயற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக அமையவும் எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
வாழ்த்துரைகள் :
இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், பிரதி புள்ளிவிபர பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், கணக்காளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களாலும், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களாலும் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டது.
ஒளிப்படம் காட்சிப்படுத்தப்பட்டது :
பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. சுப்பிரமணியம் சிவகுமாரன் அவர்களின் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை தொடர்பான ஒளிப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.
கெளரவிப்பு :
அரசாங்க அதிபர் அவர்களினால் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. சுப்பிரமணியம் சிவகுமாரன் அவர்தம் பாரியார் பொன்னாடை அணிவித்து
கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. மேலும் கிளைகள் ரீதியாக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களாலும் கெளரவிக்கப்பட்டார்கள்.
ஏற்புரை :
இறுதியாக, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் தமது ஏற்புரையில், அரசாங்க சேவையில் தான் கடந்து வந்த நீண்டகாலப் பணிப்பயணம், அக்காலப்பகுதியில் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் ஆற்றிய சேவைகள் தொடர்பில் விரிவாகப் பகிர்ந்துகொண்டார். இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசாங்க அதிபர்களாகப் பணியாற்றிய அமரர் மாணிக்கவாசகர், திரு. பத்மநாதன், அமரர் கணேஷ் மற்றும் தற்போதைய அரசாங்க அதிபர் திரு. பிரதீபன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றக் கிடைத்த வாய்ப்புகள் குறித்தும் குறிப்பிட்டார். அத்துடன், உதவித் திட்டமிடல் பணிப்பாளராக உடுவில், தெல்லிப்பழை மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலகங்களில் கடமையாற்றிய காலப்பகுதியில், பிரதேசங்களின் தேவைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கேற்ப அபிவிருத்தித் திட்டங்களைத் திட்டமிடுதல், அவற்றை நடைமுறைப்படுத்துதல் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பான அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றச் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்த அவர், பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களில் தமக்குக் கிடைத்த அனுபவங்களை எடுத்துரைத்தார். மேலும், யாழ்ப்பாணப் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள், வடிகால் கட்டமைப்புக்களின் அபிவிருத்தி மற்றும் நீர்வழிந்தோடும் பாதைகளைச் சீரமைத்தல் போன்ற உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் தொடர்பான தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, மாவட்டச் செயலகத்தில் பணியாற்றிய காலப்பகுதியில் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் தொடர்பில் குறிப்பிட்ட அவர், மாவட்ட மட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்களை ஒருங்கிணைத்தல், பிரதேச செயலகங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுதல், திட்டங்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல் போன்ற பணிகளில் தாம் ஈடுபட்ட விதம் குறித்தும் எடுத்துரைத்தார். குறிப்பாக, 2026ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரஜாசக்தி வேலைத்திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாகக் குறிப்பிட்ட அவர், இத்திட்டத்தை மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான தம்மால் ஆற்றப்பட்டது பணிகளையும் குறிப்பிட்டார். தமது நீண்டகால அரச சேவையில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்குக் கிடைத்த வாய்ப்புகள், அவற்றின் ஊடாக அடையப்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் பணிகளைச் செயற்படுத்தும்போது எதிர்கொண்ட சவால்கள் ஆகியவை தமக்குப் பெறுமதியான அனுபவங்களாக அமைந்ததாகவும் குறிப்பிட்டார். அரச சேவையில் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வு உள்ளிட்ட அவசியத்தினையும் வலியுறுத்தினார். இறுதியாக, தமது அரச சேவைக் காலப்பகுதியில் ஒத்துழைப்பு நல்கிய அனைவரும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.








