காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள், அதன் பணிகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் மாவட்ட மட்ட சிவில் சமூக அமைப்புகளின் புரிதலை வலுப்படுத்தும் நோக்கிலான பயிற்சிச் செயலமர்வு, மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன் தலைமையில், தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேராவின் பங்கேற்புடன் இன்று (13.11.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இலங்கை தேசிய சமாதானப் பேரவை மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இச் செயலமர்வினை ஏற்பாடு செய்யப்பட்டது.
நோக்கம் :
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் குறைகளைத் தீர்ப்பதற்காக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் முன்னெடுக்கும் பணிகள் மற்றும் நடைமுறைகள் குறித்து சிவில் சமூகப் பிரதிநிதிகளின் புரிதலை மேம்படுத்துவதுடன், அவர்களுக்கும் அலுவலகத்திற்கும் இடையிலான தொடர்பாடலையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதே இச்செயலமர்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
அறிமுக உரை :
அறிமுகம் மற்றும் வரவேற்புரையை தேசிய சமாதானப் பேரவையின் திரு. பென் பேரின்பநாயகம் ஆற்றினார்.
தொடக்க உரை :
யாழ்ப்பாண மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவரும், SOND நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான திரு. செந்துராஜா ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.
தலைமையுரை :
இச் செயலமர்வில் தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக 2,249 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 983 பேருக்கான இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இச்செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயம் வெறுமனே இழப்பீடுகளை வழங்குவதுடன் முடிவடையும் ஒன்றல்ல. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புகள், மனவேதனைகள் மற்றும் அவர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளையும் மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டியது அவசியமாகும். காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பணிகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் மக்களுக்கு முறையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கருத்துக்களையும் தேவைகளையும் உள்வாங்கி, அவர்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் சிவில் அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. தேசிய சமாதானப் பேரவையின் பிரதிநிதிகளுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கம், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடனும் ஒருங்கிணைந்த முறையிலும் முன்னெடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதாகும். பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேற வேண்டிய தேவை இன்னமும் காணப்படுகின்றது. எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உரிய ஆதரவையும் தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்க ஒத்துழைக்க வேண்டும் என மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
கலாநிதி ஜெஹான் பெரேரா அவர்களின் உரை :
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தை வலுப்படுத்த அரசாங்கமும் சிவில் சமூகமும் ஒன்றிணைய வேண்டும் – கலாநிதி ஜெஹான் பெரேரா காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் (OMP) செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மை, நீதி மற்றும் உரிய நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்க நிறுவனங்களும் சிவில் சமூக அமைப்புகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா வலியுறுத்தினார். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து, அவர்களது குடும்பங்களுக்கு உண்மையான தகவல்களை வழங்குவதே OMP அலுவலகத்தின் பிரதான நோக்கமாகும். கடந்த காலங்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்ட தமது கணவர்கள், பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் தொடர்பான உண்மைகளை அறிந்துகொள்ளும் எதிர்பார்ப்புடன் பல குடும்பங்கள் பல தசாப்தங்களாகக் காத்திருக்கின்றன. அண்மையில் மாத்தறையில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட தமது கணவர்களையும் உறவினர்களையும் தேடிக்கொண்டிருக்கும் தாய்மார்களும் பெண்களும் தமது துயரங்களைப் பகிர்ந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார். கடந்த கால உண்மைகளைக் கண்டறிந்து, அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கவும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுக்கவும் முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்தல், விசாரணைகளை முன்னெடுத்தல் மற்றும் கண்டறியப்படும் உண்மைகளை உரிய தரப்புகளிடம் சமர்ப்பித்தல் ஆகியவையே OMP அலுவலகத்தின் பிரதான பணிகளாகும். இழப்பீடுகளை வழங்குவது அதன் நேரடிப் பொறுப்பல்ல. அதற்கென அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்கள் செயற்பட வேண்டியுள்ளன என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அரசாங்கத்தால் தனித்து இப்பணிகளை முன்னெடுக்க முடியாது என்பதால், சிவில் சமூக அமைப்புகளின் ஒத்துழைப்பும் அவசியமானது. OMP அலுவலகம் தனித்து இயங்க முடியாத நிலையில், அரசாங்க நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொடர்புடைய தரப்புகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அத்துடன், இவ்விடயம் தொடர்பான விழிப்புணர்வையும் தகவல்களையும் பரந்துபட்ட சமூகத்திற்குக் கொண்டுசென்று, மேலும் பல சிவில் சமூக அமைப்புகளையும் இச்செயற்பாட்டில் இணைத்துக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரங்களைக் குறைத்து, அவர்களுக்கான உரிய சேவைகள், நிவாரணங்கள் மற்றும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது அனைவரதும் கூட்டுப் பொறுப்பாகும் என கலாநிதி ஜெஹான் பெரேரா வலியுறுத்தினார்.
அரசாங்க அதிபர் உரை :
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் வலிகளைப் புரிந்துகொண்டு உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டும் – அரசாங்க அதிபர் இச் செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தமதுரையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தைக் கையாளும்போது, அரச உத்தியோகத்தர்கள் வழமையான நிர்வாக நடைமுறைகள் மற்றும் ஆவணங்களுக்கு அப்பால், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணர்வுகளையும் இழப்புகளையும் புரிந்துகொண்டு மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும். காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிதல் மற்றும் அவர்களுக்கான உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தல் முக்கியமானதாக இருந்தாலும், அதுவரையான காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனவேதனையைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு உரிய ஆறுதலையும் வழிகாட்டுதலையும் வழங்க வேண்டிய பொறுப்பு அரச உத்தியோகத்தர்களுக்கு உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள், வாழ்வாதார உதவியாக அதிகபட்சம் 150,000 ரூபாய் வரையிலான நிதியுதவி மற்றும் மாதாந்தக் கொடுப்பனவுகள் போன்ற பல்வேறு உதவித் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருந்தாலும், இவை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எதிர்பார்க்கும் முழுமையான தீர்வாக அமைந்துவிட முடியாது. அவர்களின் பிரதான எதிர்பார்ப்பு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பான உண்மையையும் உரிய தீர்வையும் அறிந்துகொள்வதாகும். பிரதேச செயலாளர்கள் தங்களின் கீழ் பணியாற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு இவ்விடயம் தொடர்பில் உரிய தெளிவூட்டல்களை வழங்கி, பாதிக்கப்பட்ட குடும்பங்களை அணுகும்போது மிகுந்த கரிசனையுடனும் மனிதாபிமானத்துடனும் செயற்பட வழிகாட்ட வேண்டும். பல ஆண்டுகளாகத் தமது குடும்ப உறுப்பினர்களையும் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் மக்களின் வலியை அவர்களால் மட்டுமே முழுமையாக உணர முடியும். எனவே, அவர்களின் உணர்வுகளை மதித்து, தற்காலிக உதவிகளுடன் மட்டுப்படுத்தாமல், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிந்து உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். இந்தப் பணியில் தேசிய சமாதானப் பேரவையின் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் அரசாங்கத்திற்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் தொடர்ந்து கிடைக்கும் என நம்புவதாகத் தெரிவித்த அவர், இத்தகைய ஆக்கபூர்வமான கலந்துரையாடலை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அலுவலகச் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிப்பு :
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள், பணிகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் அதன் பிராந்திய இணைப்பாளர் திரு. த. செல்வகுமார் விளக்கமளித்தார்.
விரிவான கலந்துரையாடல் :
காணாமல் போனோர் தொடர்பான விவகாரங்களில் சிவில் சமூக அமைப்புகளின் கரிசனைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் முன்வைக்கப்படும் சவால்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
பங்குபற்றியவர்கள் :
இச்செயலமர்வில் மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் திருமதி ஜெயதீபா, சிரேஷ்ட திட்டப் பணிப்பாளர் செல்வி கனிஷ்கா, பிரதேச செயலாளர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 9 10 11 12 14