யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தேவையுடைய மாணவர்களின் பார்வைத் திறனை மேம்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் விசேட வேலைத்திட்டம் இன்றைய தினம் (14.11.2026) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தேவையுடைய மாணவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.
வரவேற்புரை :
இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் தி. வேல் நம்பி வரவேற்புரையாற்றினார்.
விளக்கவுரை :
ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் திரு. ஜி. ஜி. எஸ். சி. ரொஷான் நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கங்கள் தொடர்பாக விளக்கமளித்தார்.
அரசாங்க அதிபர் உரை :
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வழகாட்டலில் ஜனாதிபதி நிதியத்தின் பல செயற்பாடுகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்தார். குறிப்பாக, பல்கலைக்கழக மாணவர்களை இலக்காகக் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் அண்மைக்காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளான பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் நிகழ்வு அண்மையில் கௌரவ பிரதமரின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக அனுமதிக்காக ஒவ்வொரு துறையிலும் முதல் 20 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான உதவித்தொகை கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு நடைபெறுகின்றது. மேலும், ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை மக்களிடம் இலகுவாகக் கொண்டு சேர்க்கும் வகையில் முக்கியமான மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பிரதேச செயலகங்கள் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, உரிய கொடுப்பனவுகளைத் தமது பிரதேச செயலகங்களிலேயே பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மக்களைத் தேடிச் செல்லும் சிறந்த நிர்வாக அணுகுமுறையாகும். ஜனாதிபதி செயலகத்தின் செயலாளராகப் பணியாற்றும் திரு. ரோஷன் அவர்கள் அண்மையில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளராகவும் பொறுப்பேற்றுள்ளார். அவரது அர்ப்பணிப்பும் விசேட கவனமும் காரணமாக, இத்தகைய சேவைகள் கிராம மட்டம் வரை விரிவுபடுத்தப்படுவதுடன், அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி நிதியம் நோயாளர்களின் மருத்துவத் தேவைகள், பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது. இத்தகைய திட்டங்கள் தொடர்பான தகவல்களைப் பல்கலைக்கழக மாணவர்களாகிய நீங்களும் சமூகத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றீர்கள். அதேவேளை, அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அபிவிருத்தித் திட்டங்களுக்கு கணிசமான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, இலங்கையின் 25 மாவட்டங்களுக்கும் எவ்வித வேறுபாடுகளுமின்றி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். ஒவ்வொரு மாவட்டமும் தனது அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இந்நிதி முக்கியமான வாய்ப்பாக அமையும். அத்துடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட நாட்டின் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, நாட்டின் ஒட்டுமொத்த அபிவிருத்தியையும் இலக்காகக் கொண்ட வரவு செலவுத் திட்டமாக இது அமைந்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களாகிய நீங்கள் பல்வேறு வசதிகளையும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி உயர்கல்வியைப் பெற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் நாட்டிற்குச் சிறந்த சேவையாற்ற வேண்டும் என்பதே இத்தகைய உதவிகளின் உயரிய நோக்கமாகும். மேலும், அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தனது வரவு செலவுத் திட்ட உரையில், இலங்கையர்கள் தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் கல்வி மற்றும் அறிவுத்துறைகளில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், நீங்கள் ஒவ்வொருவரும் நாட்டின் சிறந்த நற்பிரஜைகளாகவும், உயர்ந்த கல்வியாளர்களாகவும், இந்த மண்ணின் பெருமையை உலகறியச் செய்பவர்களாகவும் உருவாக வேண்டும். உங்களுடைய எதிர்கால வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஜனாதிபதி செயலகமும் ஜனாதிபதி நிதியமும் தொடர்ந்தும் பல்வேறு உதவிகளையும் வாய்ப்புகளையும் வழங்கும் என்ற நம்பிக்கையுடன், இந்நிகழ்வில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். WISH Foundation நிறுவனத்தின் பிரதிநிதிகளும் நிகழ்வில் உரையாற்றினர். இறுதியாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதியின் நன்றியுரையுடன் ஆரம்ப நிகழ்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான கண் பரிசோதனைகளும் மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.








