சமூகசக்தி தேசிய இயக்கத்தின் கீழ் நிகழ்நிலைத் தரவு முறைமையில் தகவல்களை உள்ளீடு செய்வது தொடர்பான மாவட்ட மட்ட விழிப்புணர்வுச் செயலமர்வு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (17.11.2026) மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது.
நோக்கம் :
பிரஜாசக்தி தேசிய இயக்கத்தின் கீழ் கிராம மட்டத் தரவுகளைச் சேகரித்து, அவற்றை நிகழ்நிலைத் தரவு முறைமையில் உள்ளீடு செய்வதற்கான நடைமுறைகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதி, உதவிப் பணிப்பாளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கில் இச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தலைமையுரை :
சமூக சக்தி செயற்திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தரவுகளின் அடிப்படையில் திட்டமிடப்பட வேண்டும் – அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இச் செயலமர்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், 2026ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூக சக்தி செயற்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய பிரதேச செயலாளர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். மேலும், இவ்வாண்டு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்த அவர், திட்டங்களை உரிய காலத்தில் ஆரம்பிப்பதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் ஏற்பட்ட சில சவால்களைச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, திட்டங்களுக்கான உரிமை மற்றும் அனுமதிகளை முன்கூட்டியே உறுதிப்படுத்தாமை, போதிய திட்டமிடல் இல்லாமை போன்ற காரணங்களால் சில செயற்பாடுகளை முழுமையாக நிறைவேற்றுவதில் சிரமங்கள் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார். வறுமை ஒழிப்பு என்பது பொருளாதார உதவிகளை வழங்குவதுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது. குடிநீர், சுகாதாரம், உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கிய பன்முக வறுமையை அடையாளம் கண்டு அதற்கேற்ப தீர்வுகளை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதற்காக ஒவ்வொரு கிராமத்தின் சமூக, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிக்கும் துல்லியமான அடிப்படைத் தரவுத்தளம் அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கிராம மட்டத் தரவுப் புத்தகத்தை மேலும் செம்மைப்படுத்தி, மாவட்டங்களின் தனித்துவமான தேவைகளையும் உள்ளடக்கியதாக இறுதிப்படுத்த வேண்டும் என்றார். இத்தரவுகள் பின்னர் டிஜிட்டல் மயப்படுத்தப்படுவதன் மூலம் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், அவற்றின் பயன்களை மதிப்பீடு செய்யவும் முடியும் எனத் தெரிவித்தார். அத்துடன், கிராம மட்டத்தில் திட்டங்களைத் தெரிவுசெய்யும்போது அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய கலந்தாய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும், மக்களின் உண்மையான தேவைகளின் அடிப்படையில் முன்னுரிமைத் திட்டங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 2027ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, வீதி, சுகாதாரம், குடிநீர் மற்றும் ஏனைய அடிப்படைத் தேவைகள் தொடர்பான முன்னுரிமைப் பட்டியல்களைத் தயாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மாவட்டத்திற்கு ஒதுக்கப்படவுள்ள அபிவிருத்தி நிதிகளை வினைத்திறனுடனும் உரிய முறையிலும் பயன்படுத்துவதற்கு இத்தகைய தரவுத்தளம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார். இச்செயற்பாட்டில் பிரதேச செயலகங்களின் திட்டமிடல் உத்தியோகத்தர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் விசேட கவனம் செலுத்தி, கிராம மட்டத் தரவுகளைச் சரிபார்த்து, தேவையான திருத்தங்கள் மற்றும் மேலதிக உள்ளடக்கங்களைப் பரிந்துரைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இறுதியாக, இச் செயலமர்வினை வெறுமனே ஒரு கூட்டமாகக் கருதாமல், மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டமிடலுக்கான பயனுள்ள பணிமனையாகப் பயன்படுத்தி, அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
கிராமிய அபிவிருத்தி நூல்கள் அறிமுகம் :
'சிக்கலைப் புலப்படுத்துதல் – கிராமத் தரவுகளிலிருந்து தகவலறிந்த தீர்மானங்களை எடுத்தல் வரை 'என்ற நூல் மற்றும் கிராம அடிப்படையிலான அடிப்படைத் தரவு நூல் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.
வளவாளர்கள் :
டிஜிட்டல் முறைமைகள் தொடர்பான விளக்கங்களை ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் செல்வி சரதாஞ்சலி மனோகரன் அவர்களும், கிராமிய அபிவிருத்திக் குழு (CDC) மட்டத்தில் அடிப்படைத் தரவுகளைச் சேகரித்தல் மற்றும் தரவு நூலில் தகவல்களை உள்ளீடு செய்தல் தொடர்பான விளக்கங்களை சமூகசக்தி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் செல்வி என். யோகேஸ்வரன் அவர்களும் வளவாளர்களாகக் கலந்து கொண்டு வழங்கினர். மேலும், பிரதேச செயலாளர்களிடம் கிராம அடிப்படையிலான அடிப்படைத் தரவு நூல்கள் கையளிக்கப்பட்டதுடன், அவற்றைப் பயன்படுத்துதல் மற்றும் தரவுகளை முறையாகப் பதிவேற்றுதல் தொடர்பான விரிவான விளக்கங்களும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து திறந்தவெளி கலந்துரையாடலும் இடம்பெற்றது. இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.








