அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனர்த்த நிவாரண மற்றும் மீட்புப் பணிகள், டித்வா சூறாவளிக்குப் பின்னரான மக்களின் மீட்பு நடவடிக்கைகள், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரணங்கள் மற்றும் நலன்புரிச் சேவைகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட சர்வமத உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்கேற்புடன் இன்றைய தினம் (18.11.2026) காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது.
நோக்கம் :
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனர்த்த நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பான தகவல்களை சமூக மட்டத்திற்குக் கொண்டு செல்வதுடன், பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான அரசாங்க உதவிகளையும் உரிமைகளையும் தடையின்றிப் பெற்றுக்கொள்வதற்கு சர்வமத அமைப்புகளின் பங்களிப்பை வலுப்படுத்துவதும் இச்செயலமர்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
இலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வரவேற்புரை :
இச்செயலமர்வில் யாழ்ப்பாண மாவட்ட சர்வமதத் குழுவின் பிரதிநிதியும், SOND நிறுவன இணைப்பாளருமான திரு. கணபதிப்பிள்ளை கௌரிரூபன் வரவேற்புரையாற்றினார்.
அறிமுகவுரை :
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் திருமதி. நிரோஷா அன்டனி அவர்கள், திட்டத்தின் நோக்கம் மற்றும் உள்ளடக்கம் தொடர்பான அறிமுகவுரையை நிகழ்த்தினார். இதன்போது, அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் மக்களுக்கு அரசாங்கத்தின் சேவைகள் மற்றும் நிவாரண உதவிகளை உரிய முறையில் பெற்றுக்கொடுப்பதில் சர்வமதக் குழுக்கள் முக்கிய இடைநிலை இணைப்பாளர்களாகச் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், அனர்த்தங்களின்போது உயிரிழப்புகள், வீடுகள் மற்றும் உடைமைகளின் இழப்புகள் மட்டுமன்றி, பிறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இழத்தல், சிறுவர்களின் கல்வி பாதிக்கப்படுதல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன எனக் குறிப்பிட்டார். இவ்வாறான சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் இடையில் பாலமாகச் செயற்பட்டு, அவர்களுக்குத் தேவையான அரச சேவைகள், நிவாரணங்கள் மற்றும் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க சர்வமதக் குழுக்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் கல்வியைத் தொடர்வதில் எதிர்கொள்ளும் தடைகள், ஆவணங்களை மீளப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பற்ற வாழ்விடங்களில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வமதக் குழு உறுப்பினர்கள் தெளிவான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
குறிப்பாக, மலையகத் தொழிலாளர்கள் ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) போன்ற தொழிலாளர் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் இடைத்தரகர்களின் தலையீடுகள் குறித்தும் எடுத்துரைத்தார். இத்தகைய பிரச்சினைகளில் மக்களுக்கு உரிய வழிகாட்டல்களை வழங்கி, அரச நிறுவனங்களுடன் இணைந்து தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது அவசியம் எனக் குறிப்பிட்டார். அத்துடன், இளைஞர்களை வலுவூட்டுவதன் மூலம் எதிர்காலத்தில் அனர்த்த முகாமைத்துவம், சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் அரச சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தல் போன்ற பணிகளில் அவர்களையும் திறம்பட ஈடுபடுத்த முடியும் எனத் தெரிவித்தார். சர்வமதக் குழுக்களின் செயற்பாடுகள் சமாதானம், நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை மேம்படுத்துவதுடன் நின்றுவிடாமல், மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் சமூகப் பொறுப்பையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும் எனவும் திருமதி. நிரோஷா தெரிவித்தார்.
அரசாங்க அதிபரின் கருத்துரை :
அனர்த்த நிலைமைகளின்போது அரசாங்க உத்தியோகத்தர்கள் மாத்திரமன்றி, மதம், இனம், மொழி வேறுபாடுகளைக் கடந்து சர்வமதத் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய சமாதானப் பேரவை நீண்டகாலமாக இவ்வாறான கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றது. அதன் பணிப்பாளர் கலாநிதி ஜெகத் பெரேரா மற்றும் திட்ட முகாமையாளர் திருமதி. நிரோஷா அன்டனி உள்ளிட்ட பொறுப்பாளர்களின் ஒத்துழைப்புடன், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் அனர்த்தத்திற்குப் பின்னரான மீட்பு நடவடிக்கைகள் தொடர்பில் எமது மாவட்டத்திலும் விரிவான தெளிவூட்டலை ஏற்படுத்த வேண்டிய தேவை உணரப்பட்டது. இலங்கை பல்வேறு இயற்கை அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக, சுனாமிப் பேரனர்த்தம் எமது நாட்டின் சமூக, பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்படுத்திய தாக்கங்கள் மறக்க முடியாதவை. இத்தகைய அனுபவங்கள் எதிர்கால அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வையும் தயார்நிலையையும் எம்மத்தியில் ஏற்படுத்தியுள்ளன. டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக, இம்முறை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட நிவாரணத் திட்டங்களும் ஒதுக்கப்பட்ட நிதியும் முன்னெப்போதைய அனர்த்தங்களிலும் காணப்படாத வகையில் விரிவானதாக அமைந்துள்ளன. அதேவேளை, அதிகளவிலான நிவாரண உதவிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, அவற்றை உரிய முறையில் பகிர்ந்தளிப்பது மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளைச் சரியான முறையில் முகாமைத்துவம் செய்வது போன்ற விடயங்களில் பல்வேறு சவால்களும் காணப்பட்டன. குறிப்பாக, கிராம மட்டத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் இத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே, அனர்த்தங்களின்போது நிவாரணங்களை வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல. பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான தேவைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கான உதவிகள் உரிய முறையில் சென்றடைவதையும் உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு அரச நிறுவனங்களுக்கும் சமூக அமைப்புகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது.
அந்த வகையில், இக்கலந்துரையாடல் கடந்தகால அனர்த்த அனுபவங்களை மீளாய்வு செய்வதற்கும், எதிர்காலத்தில் இத்தகைய அனர்த்தங்கள் ஏற்படும்போது மக்களை எவ்வாறு பாதுகாப்பது, பாதிக்கப்பட்ட சமூகங்களை எவ்வாறு மீட்டெடுப்பது மற்றும் அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு மீளக் கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் பயனுள்ள ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும், டித்வா சூறாவளியினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள், அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி, அனர்த்தப் பாதிப்புகள் தொடர்பான அறிக்கையிடல் நடைமுறைகள் ஆகியன தொடர்பில் விளக்கமளித்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான அரசாங்க உதவிகள், நலன்புரி உரிமைகள், பொருளாதார உள்ளடக்கத்தை மேம்படுத்தும் சேவைகள் மற்றும் அரசாங்கத்தின் ஊடாகக் கிடைக்கப்பெறும் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். அனர்த்தங்களிலிருந்து மக்களை மீட்டெடுப்பதில் அனைவரும் பொறுப்புணர்வுடன் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே பாதிப்புகளைக் குறைத்து, சமூகத்தின் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கேள்வி–பதில் அமர்வு :
தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடல் மற்றும் கேள்வி–பதில் அமர்வில் சர்வமதப் பிரதிநிதிகள் தமது கருத்துக்களையும் கேள்விகளையும் முன்வைத்தனர். இதன்போது, முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பதிலளித்து, உரிய விளக்கங்களையும் தெளிவுபடுத்தல்களையும் வழங்கினார்.
நன்றியுரை :
யாழ்ப்பாண மாவட்ட சர்வமதக் குழுவின் இணைப்பாளர் திருமதி. எஸ். ஜென்சி அவர்களால் நன்றியுரை ஆற்றப்பட்டது. இச்செயலமர்வில் சர்வமதத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு. என். தயாபரன், சர்வமதத் குழுவின் உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர்கள் சேவைகள் மன்ற பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.









