இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனங்களில் ஒன்றான அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒஃப் சிலோன் லிமிடெட் (Associated Newspapers of Ceylon Limited – Lake House) தனது 100ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், யாழ்ப்பாணக் கிளையின் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்வொன்று இன்று (20.11.2026) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் மற்றும் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளான ஸ்ரீ சங்கரன் ராஜகோபாலன், ஸ்ரீ நாகராஜன் ராமசாமி ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர். அதிதிகள் மாலை அணிவித்து மரியாதையுடன் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றலும் சர்வமதத் தலைவர்களின் ஆசியுரைகளும் இடம்பெற்றன. தொடர்ந்து, லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பிரதம ஆசிரியர் குணராசா வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அதிதிகளின் வாழ்த்துரைகள் இடம்பெற்றன.
அரசாங்க அதிபரின் வாழ்த்துரை :
ஒரு ஊடக நிறுவனம் நூறு ஆண்டுகளைக் கடந்து தனது பணியைத் தொடர்ந்து முன்னெடுப்பது மிகவும் சவாலானதும், இரட்டிப்புப் பெருமைக்குரியதுமான விடயமாகும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். இன்றைய காலமாற்றத்திற்கேற்ப அச்சு ஊடகங்களின் செயற்பாடுகளும் வாசிப்புப் பழக்கங்களும் மாற்றமடைந்து வருகின்ற போதிலும், லேக் ஹவுஸ் நிறுவனம் மூன்று மொழிகளிலும் தனது பத்திரிகைகளை வெளியிட்டு வருவது பாராட்டுக்குரிய விடயமாகும். குறிப்பாக, தினகரன் பத்திரிகை 94 ஆண்டுகளாகத் தமிழ்மொழியில் தனது காத்திரமான ஊடகப் பணியை முன்னெடுத்து, மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது. அதேபோன்று தினமின மற்றும் டெய்லி நியூஸ் ஆகிய பத்திரிகைகளும் தத்தமது மொழிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றன. ஊடகங்களின் மிக முக்கியமான அடையாளம் அவற்றின் நம்பகத்தன்மையாகும். அச்சு ஊடகமாக இருந்தாலும் இலத்திரனியல் ஊடகமாக இருந்தாலும் மக்களுக்கு உண்மையானதும் நம்பகமானதுமான தகவல்களை வழங்குவதில் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஊடகங்களின் நம்பகத்தன்மையை வளர்ப்பதில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப லேக் ஹவுஸ் நிறுவனம் இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் தனது செய்திப் பணிகளை விரிவுபடுத்தி வருவது வரவேற்கத்தக்கது. காலமாற்றத்தில் பல்வேறு புதிய ஊடக வடிவங்கள் உருவாகியுள்ள போதிலும், அச்சு ஊடகங்களின் தனித்துவமும் அவற்றின் முக்கியத்துவமும் தொடர்ந்து நிலைத்திருக்கும். எதிர்காலத்தில் மக்கள் மீண்டும் அச்சு ஊடகங்களை அதிகளவில் நாடக்கூடிய சூழலும் உருவாகலாம். அச்சு ஊடகங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது அதிக செலவுகளையும் வளங்களையும் கோரும் சவாலான பணியாகும். இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் நூறு ஆண்டுகளாக இலங்கையின் ஊடகத்துறையில் தனித்துவமான அடையாளத்துடன் தனது பணியை முன்னெடுத்து வரும் லேக் ஹவுஸ் நிறுவனம் பாராட்டுக்குரியது. இலங்கையின் பத்திரிகை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இந்தச் சாதனைக்குப் பங்களித்த நிறுவனத்தின் பணிப்பாளர் குழாம், ஆசிரியர் குழாம், பிராந்திய ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். ஊடகத் தர்மத்தையும் நம்பகத்தன்மையையும் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
விசேட பதிப்பின் பிரதிகள் வழங்கல் :
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் 100ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட விசேட பதிப்பின் பிரதிகள் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிகை முகவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட பலரும் கலந்து கொண்டனர்.








