2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் புதிதாக முகாமைத்துவ சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்பட்ட ஆளுமை விருத்திப் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, இன்றைய தினம் (20.11.2026) நண்பகல் 12.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பயிற்சி நெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த 37 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்களை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வழங்கி வைத்தார்.
அரசாங்க அதிபர் உரை :
இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள் உரையாற்றுகையில், அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கு அறிவு, திறமை என்பவற்றுடன் பொறுப்புணர்வும் சரியான மனப்பாங்கும் அவசியம் எனத் தெரிவித்தார். அலுவலகக் கடிதங்கள் மற்றும் ஆவணங்களைத் தயாரிக்கும்போது எழுத்து, கருத்து மற்றும் கணக்குப் பிழைகள் ஏற்படாத வகையில் கவனமாகச் செயற்படுவதுடன், திணைக்களத் தலைவர்கள் தம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டார். உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் இலக்குகளை உரிய காலத்தில் அடைவதும், பணிகளைத் தரமான முறையில் நிறைவேற்றுவதும் அவர்களது செயற்றிறனை வெளிப்படுத்தும் முக்கியமான அம்சங்களாகும். கணக்குப் பிரிவு, திட்டமிடல் பிரிவு உள்ளிட்ட எந்தத் துறையில் பணியாற்றினாலும், ஒவ்வொரு உத்தியோகத்தரின் பணியும் ஏதோவொரு வகையில் பொதுமக்களின் நலனுடன் தொடர்புடையது என்பதனை உணர்ந்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இப்பயிற்சியில் பெற்றுக்கொள்ளும் அறிவு மற்றும் அனுபவங்களைத் தமது முழுமையான அரச சேவைக் காலத்திலும் நடைமுறைப்படுத்துவதன் மூலம், மக்கள் நலனிலும் திணைக்கள நலனிலும் அக்கறை கொண்ட நேர்மையான, பொறுப்பான அரச உத்தியோகத்தர்களாகத் திகழ முடியும் எனவும் அரசாங்க அதிபர் வலியுறுத்தினார்.
பயிற்சிக் காலம் :
புதிதாக முகாமைத்துவ சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களின் தொழில்சார் அறிவு, திறன்கள் மற்றும் ஆளுமைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், 10 நாள் பயிற்சி கடந்த 09.11.2026 முதல் 20.11.2026 வரை இப்பயிற்சி நெறி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, ஸ்தாபன விதிக்கோவை, அலுவலக நடைமுறைகள், நிதி நடைமுறைகள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் கணினித் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி. உ. தர்சினி, விடய உத்தியோகத்தர் திரு. மு. மகிம்சன் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.








