உடுவில் பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த பண்பாட்டுப் பெருவிழா 20.11.2026 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஏழாலை முத்தமிழ் மன்ற மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. உடுவில் பிரதேச செயலாளரும் பிரதேச கலாசாரப் பேரவைத் தலைவருமான திருமதி பிரேமினி பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி தர்சினி நிதர்ஷன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி மாலினி கிருஸ்ணானந்தன் அவர்களும், நாடகக் கலைஞரும் கலைக்குரிசில் விருது பெற்றவருமான திரு ந. பரமேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டனர். இசைக்கலைஞர் கலாபூஷணம் தம்பு சற்குருநாதன் அவர்களின் கலைப்பணிகளை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட அரங்கில் விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின. மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் தொடங்கியதுடன், உடுவில் அயோத்தியா கலைமன்றத்தினரின் தமிழ்த்தாய் வாழ்த்தும், இணுவையூர் திரு கோ. இரத்தினகுமார் குழுவினரின் மங்கல இசையும் இடம்பெற்றன. தொடர்ந்து ஞானஏந்தல் இரத்தினம் இராஜேஸ்வரன் அவர்கள் அரங்கத்திறப்புரையையும், உடுவில் உதவிப் பிரதேச செயலாளர் திரு ஜெ. றெமின்ரன் அவர்கள் வரவேற்புரையையும் நிகழ்த்தினர். இணுவில் திருநெறிய தமிழ்மறைக் கலா மன்றத்தின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான கலைநிகழ்வுகளில், இணுவை குமார நர்த்தனாலயக் குழுவினரின் நடனம் மற்றும் கீர்த்தனம், உடுவில் பிரகரிஸ் இசை மன்றத்தின் வாத்திய இசை, இணுவில் திருநெறிய தமிழ்மறைக் கலா மன்றத்தின் கோலாட்டம், ஏழாலை வாகீஸ்வரி நாடக மன்றத்தின் இசை நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைப்படைப்புகள் அரங்கேற்றப்பட்டன. தலைமையுரையும் விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றன. இதன்போது பிரதேச மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களைக் கௌரவிக்கும் வகையில் ஞானஏந்தல் விருதும், வளர்ந்துவரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இளங்கலைஞர் விருதும் வழங்கப்பட்டன.
ஞானஏந்தல் விருது பெற்றோர்:
- திரு சிதம்பரப்பிள்ளை சிவராஜன் – நாடகம்
- திரு நாகையா கிருபாகரன் – நாடகம்
- திருமதி ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன் – கவிதை
- திருமதி மகாலஷ்மி ஜெயநாதன் – இசை
இளங்கலைஞர் விருது பெற்றோர் :
- திரு குகேந்திரன் அனுசன் – இசை
- திரு சின்னராசா அனோஸ்ரின் – வாத்திய இசை
- திருமதி டொறின் றசிபன் – நடனம்
- திருமதி சுகிர்தினி பிரபு – இசை
நன்றியுரையினை உடுவில் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி விஜிதா செல்வகுமார் அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து புன்னாலைக்கட்டுவன் சுரபி கலை இலக்கிய மன்றத்தினரின் தமிழ்மொழி வாழ்த்துடன் விழா இனிதே நிறைவுற்றது. இவ்விழாவில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 14 13 12 15