இலங்கையின் 72 வது சுதந்திரதினம் இன்று (04-02-2020) "பாதுகாப்பான தேசம் சுபீட்சமான நாடு" என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டது. இந்தவகையில் யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் அவர்களின் தலைமையில் காலை 8.00 மணிக்கு தேசியக்கொடி ஏற்றலுடன் சுதந்திர தின வைபவம் ஆரம்பமானது.

தொடர்ந்து தமிழ், சிங்கள மொழிகளில் தேசியகீதம் இசைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சமயகுருமார்களின் வாழ்த்துச் செய்திகள் இடம்பெற்றன. தொடர்ந்து அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் அவர்கள் சுதந்திர தின சிறப்பு வாழ்த்துச் செய்தியை வழங்கினார். அவர் தனது உரையில் "பாதுகாப்பான தேசம் சுபீட்சமான நாடு" என்ற கருப்பொருளுக்கமையவும், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் 10 அம்சக் கொள்கை பிரகடனத்தின் பிரகாரமும் அரசாங்க உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்றுபட்டு இலங்கைத் திருநாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து மரநடுகை நிகழ்வுகளும் சிரமதான நிகழ்வுகளும் மாவட்ட செயலக பழைய பூங்கா வளாகத்திலும், விருந்தினர் விடுதி மற்றும் ஆண்கள், பெண்கள் தங்குமிட விடுதிகளிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. எம். பிரதீபன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. எஸ். முரளிதரன் உட்பட அனைத்து மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

independance flag flag
multiple religious
planting