கொவிட் 19 வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக தொழில்வாய்ப்பு மற்றும் வருமானங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் கொரோனா தடுப்புச் செயலணியின் வழிகாட்டலின் கீழ் யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடக நிவாரண உதவிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் அரச உதவித்திட்டங்களின் கீழ் சமுர்த்தி பயனாளிகளான 74,458 குடும்பங்களுக்கும் சமுர்த்தி உதவிக்காக காத்திருக்கும் 9,427 குடும்பங்களுக்கும் சமுர்த்தி கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்கு மேலதிகமாக 36,000 சமுர்த்தி பயனாளிகளுக்கான உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பயனாளிகளுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன. முதியோர் உதவி வழங்கல் திட்டத்தின் கீழான 18,371 பயனாளிகளுக்கும் முதியோர் உதவிக்காக காத்திருப்போர் என்ற அடிப்படையின் கீழ் 2,856 பயனாளிகளுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவுகள் 7,359 பயனாளிகளுக்கும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட 385 பயனாளிகளுக்கும் கொடுப்பனவுகள் இதுவரை பகிரப்பட்டுள்ளன. இதற்காக 564 மில்லியன் ரூபா நிவாரண உதவியாக பாதிக்கப்பட்டவர்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.

இதேவேளை பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடான பொருள் விநியோகத்தினை மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக கூட்டுறவு ஆணையாளருக்கு ஒரு கோடி ரூபா நிதி முற்பணமாக வழங்கப்பட்டுள்ளதுடன் உணவு ஆணையாளரின் அனுசரனையுடன் கட்டுப்பாட்டு விலையில் அரிசி, பருப்பு போன்ற பொருட்களும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 08-04-2020 வரையான காலப்பகுதியில் மாவட்டச் செயலகத்தினுடாக 19 அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் நலன்விரும்பிகளின் உதவியுடன் 16,473 குடும்பங்களுக்கு 9.60 மில்லியன் பெறுமதியான உலருணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. 15 பிரதேச செயலகங்களினூடாக 370 மேற்பட்ட நலன்விரும்பிகள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் உதவியுடன் 45,046 குடும்பங்களுக்கு 49.2 மில்லியன் பெறுமதியான உலருணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன அந்தவகையில் 61,519 குடும்பங்களுக்கு 58.8 மில்லியன் பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

மேலும் இவ்வாறு நிவாரண உதவிகள் வழங்க விரும்புகிறவர்கள் மாவட்டச் செயலகம் அல்லது பிரதேச செயலகங்களினுடாக வழங்குவதன் மூலம் நிவாரணம் தேவைப்படுவோர் தவறவிடப்படல் அல்லது மேலதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஒருவருக்கு வழங்கப்படல் போன்றவை தவிர்க்கப்பட்டு சீரான முறையில் நிவாரண வழங்களினை மேற்கொள்வது பொருத்தமானதாக இருக்கும் என யாழ் மாவட்டச் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் நிவாரணங்களை வழங்க விரும்பும் நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் நலன்விரும்பிகள் பயனாளிகளை தெரிவுசெய்வதற்கு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்படுகின்ற பட்டியலை மட்டுமே பயன்படுத்துமாறு மாவட்ட செயலகம் அறிவுறுத்துகின்றது.

இவ் நிவாரண உதவிகள் தொடர்பான மேலதிக விபரங்களை (Relief Assistace) மாவட்டச் செயலக உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவுத் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு 021 222 5000 மற்றும் 021 2 117 117 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு மாத்திரம் தொடர்புகொள்ளும் படி மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

1.dr2

 

 1  10 4 20