IMG 20200617 WA0004"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்" 

என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க மிகச்சிறப்பான முறையில் நம்மோடு வாழ்ந்த அமரர் சிவகுரு ரங்கராஜா அவர்களின் மறைவு அனைத்து மட்டங்களிலும் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பன்முக ஆற்றல் கொண்ட அமரர் சிவகுரு ரங்கராஜா அவர்கள் தன்னுடைய தனித் திறமையினால் அனைவரது மனங்களையும் வெற்றி கொண்டதோடு நிர்வாக ரீதியாக மிகச் சிறப்பான முறையிலே செயற்பட்டு, அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்திருந்தார் என்பதுடன் பல நிர்வாகிகளை உருவாக்கியும், ஆற்றுப்படுத்தியும் அர்ப்பணிப்பு மிக்க சேவையினை இம்மண்ணிற்கு ஆற்றியுள்ளார்.

குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாண சபையின் நிறுவுதலிற்கும், வினைத்திறனாக சேவை முன்னெடுப்பிற்கும் அர்ப்பணிப்பு மிக்க சேவையினை தொடர்ச்சியாக வழங்கியிருந்தார்.

அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு திட்டநடைமுறைகளை உருவாக்குவதிலும் அவற்றை முன்னெடுப்பதிலும் உரிய நோக்கம் தவறாது பயனுறுதிமிக்க செயல்வடிவம் கொடுப்பதிலும் அதன் சாதக பாதக தன்மைகளை உய்த்தறிந்து மக்கள் பயன்பெறத்தக்க வகையிலும் செயல்படுத்தி ஒரு செயல்வீரனாகவே மிளிர்ந்திருந்தார். இச்செயற்பாடுகளினூடு பன்முக ஆளுமை விருத்தியை வளர்த்தெடுப்பதில் காத்திரமான பங்களிப்பை உத்தியோகத்தர்களுக்கு வழங்கியிருந்தார்.

திட்டமிடல்சார் நிரம்பிய அறிவாற்றலும் நிர்வாக விடயங்கள் சார்ந்த புலமையும் தன்னகத்தே கொண்டு தலைமைப்பீட உதவி அரசாங்க அதிபராக, வடக்கு கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக, வடக்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளராக, வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக மட்டுமன்றி நியாப், நிகொட், நெக்டப் மற்றும் நேர்ப் போன்ற திட்டங்களை சிறந்த முறையில் உருவாக்கி நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவர்.

அன்னாரது இழப்பு அவருடைய குடும்ப உறவுகளுக்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்குமான பேரிழப்பாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரது இழப்பால் தவிக்கும் குடும்பத்தினருக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகம் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

க.மகேசன்
அரசாங்கஅதிபர்/ மாவட்டசெயலாளர்
மாவட்டசெயலகம்
யாழ்ப்பாணம்.