கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று 6.11.2020 முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியது.

சுபீட்சத்தின் நோக்கு என்ற அரசின் கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்ப கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்துக்கு அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுக்களை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள

* சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு

* வாழ்வாதார மேம்பாட்டு குழு

* உள்நாட்டு உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்கான அபிவிருத்தி குழு

* கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுக்களை உள்ளடக்கிய வகையில் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் விடயங்கள் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

நீர்ப்பாசனம் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச, மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோரை உள்ளடங்கி இராஜாங்க அமைச்சர்கள் இந்தக் குழுவில் உள்ளனர்.
அந்த வகையில் கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவின் கலந்துரையாடல் யாழ்ப்பாணம்- கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பிலான தரவுகள் மாவட்டச் செயலாளர்களால் விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.


மேலும், நீர், மின்சாரம்,வீதி புனரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள்,Covid19 தொற்றிடர் நிலையில் இவற்றை முன்னெடுத்துச் செல்வதிலுள்ள தாமதங்கள் போன்ற பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

இன்றைய கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எம்.எஸ் சால்ஸ்,கௌரவ அமைச்சர் ஜோன்சன் பெனாண்டோ, கௌரவ அமைச்சர் துணிந்த திசாநாயக்க, ஆளுநரின் செயலாளர்,பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன்,கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான்,யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஷ்வரன், சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ,யாழ் மாநகர மேஜர், கிளிநொச்சி மாவட்ட செயலாளர், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்),யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள்,மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் ,மற்றும் துறைசார் அதிகாரிகள் என பல தரப்பினரும் ஆகியோர் இங்கு கலந்து கொண்டிருந்தனர்.

 

img1    img4