டெங்கு நுளம்பு பெருகுவதைத் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் இணைந்து செயலாற்ற வேண்டியது அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று  (17) இடம்பெற்ற யாழ் மாவட்ட சுகாதார மேம்பாட்டு குழு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ் மாவட்ட சுகாதார மேம்பாட்டு குழு கூட்டத்தில் டெங்கு கட்டுப்பாடு தொடர்பாகவும் அதே நேரத்தில் கொரோனா தொற்று  தொடர்பாகவும் கலந்துரையாடி இருந்தோம் .

இந்த கூட்டத்தில் டெங்கு ஒழிப்பு மிக அவசியமானதும் அவசரமானதுமான ஒரு நிலையாக காணப்படுவதன் காரணமாக அந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டிருந்தது. டெங்கு நிலைமை தற்பொழுது மழை காலம்  ஆரம்பித்துள்ளதன் காரணமாக நீர் தேங்கி நிற்கின்ற இடங்களில் நீர் தேங்குவதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானித்தோம்.

இந்த நடவடிக்கைகளை கிராம மட்ட, பிரதேச, மாவட்ட மட்டங்களில் விழிப்புணர்வினை முன்னெடுத்து நீர் தேங்கி நிற்கும் இடங்களை துப்பரவு செய்து நீர் வழிந்தோட கூடிய நிலைமையினை ஏற்படுத்தி சுற்று சூழலில் சுகாதாரத்தை பேணி டெங்கு நுளம்பு பெருகுவதைத் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கையாக அனைத்து தரப்பினரும் இணைந்து செயலாற்ற வேண்டிய ஒரு நிலைமைதொடர்பில் ஆராயப்பட்டது.

புள்ளிவிவரங்களின்படி வருட இறுதியில் டெங்கு டெங்கு தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. அதனடிப்படையில் இந்த வருடத்தில் கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது தற்போதைய நிலையில் 2483 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் நவம்பர் மாதத்தில் மட்டும் 10 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஆகவே இந்த டெங்கு ஒழிப்பு மிக  அவசியமாகத் தேவைப்படுகின்ற ஒன்றாககாணப்படுகிறது. குறிப்பாக யாழ். நகரப்பகுதி முன்னிலையில் காணப்படுகின்றது. சனசெறிவு அதிகமாக உள்ள இடம் என்பதனால் வடிகான்கள் அதிகம் அதேபோல் ஏனைய செயற்பாடுகள் அதிகமாக காணப்படுவதனால் யாழ் மாநகரசபை அண்டிய பிரதேசம் டெங்கு தாக்கத்தில் மிகவும் முன்னிலையில்  காணப்படுகின்றது. அதே நேரத்தில் சாவகச்சேரி, சங்கானை  பிரதேச செயலகபிரிவிலும் தொற்று வீதம் அதிகமாகக் காணப்படுகின்றது.

யாழில் மூன்று பிரதேச செயலகத்தை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் டெங்கின் அபாயம் அதிகமாக  காணப்படுகின்ற காரணத்தினால் டெங்கு கட்டுப்பாட்டுக்குரிய உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முன்னேற்பாட்டுக்கான அடிப்படையில் இன்று   விரிவாக ஆராயப்பட்டது.

அதேபோல்  கிராமிய மட்ட குழு பிரதேச மட்ட குழு மாவட்ட மட்ட குழு போன்றவற்றின் பங்கு, பணிகள் மற்றும்  விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இந்த நிலையில் குறிப்பாக நீர் தேங்க கூடிய இடங்களை அகற்றி நீர் வழிந்தோட கூடிய நிலையினை ஏற்படுத்துவதன் மூலம் இந்த டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்துவோம் என தீர்மானிக்கப்பட்ட தாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.