Covid 19 தடுப்பு தொடர்பில் ஆராயும் ஒருங்கிணைப்புக் குழுக் கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் (07.01.2021 ) அன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியும் மாவட்ட கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரியுமான மேஜர் ஜெனரல் செனரத் பண்டார ,
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது யாழ் மாவட்டத்தில் Covid19 நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் தொடர்ச்சியாக தற்போதுள்ள நிலைமையினை பேண முடியும் என தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடலில் தற்போது யாழ் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சந்தைகளை Covid 19 தாக்கம் காரணமாக தற்போது மீளத் திறப்பது சாத்தியமில்லை என தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தில் இந்தியா மற்றும் இலங்கை பக்தர்கள் கலந்து கொள்ளுவதால் இதற்கான முடிவினை, மத்திய சுகாதார அமைச்சு தீர்மானம் எடுக்கதீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியும், மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரியுமான மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், இராணுவ உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் , பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் , உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் யாழ் மாவட்டத்தில் பாதுகாப்பு தரப்பினர், மற்றும் பொலீசாரின் உதவியுடன் Covid19 கட்டுப்பாட்டு செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது

|