தமிழ் இணையக் கல்விக்கழகமும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்திய வடக்கு மாகாணத்தின் 9ஆவது பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணம், தென்மராட்சி, கொடிகாமத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் இன்று (01.11.2026) வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழியல் சிறப்புப் பட்டக் கற்கைநெறியைப் பூர்த்தி செய்த 70 மாணவர்கள் இந்நிகழ்வில் தமது பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். அத்துடன், முதல் வகுப்பில் சிறப்புச் சித்தி பெற்ற ஐந்து மாணவர்கள் “ராஜராஜ சோழன்” விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். மேலும், பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் மொழிக் கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கும் இதன்போது பட்டயச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வடக்கு மாகாண இணைப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான க. ரஜனிகாந்தன் தலைமையில் இடம்பெற்ற இப்பட்டமளிப்பு விழாவில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி தி. விக்கினேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி வைத்தனர். இந் நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் வடக்கு மாகாண சிரேஷ்ட சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் எம். ஏ. எம். அனஸ், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வடக்கு மாகாண விரிவுரையாளர்களான சி. இளந்திரையன் மற்றும் க. முருகதாஸ், பிரெஞ்சு மொழி விரிவுரையாளர் துஷ்யந்தி ரஜனிகாந்தன், ஜேர்மன் மொழி விரிவுரையாளர் ஆர். மயூரதன் ஆகியோரும் விருந்தினர்களாகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். நிகழ்வின் இறுதியில் விருந்தினர்கள் கெளரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.








