குடிசன வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024 இன் கீழ் வட்டத்திற்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களுக்கான (Circle Officers) இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (13.08.2024) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தலைமையுரையில் கருத்து தெரிவித்த பதில் அரசாங்க அதிபர் அவர்கள் நாட்டின் சகல விடயங்களுக்கும் மற்றும் தேசிய கொள்கையினை நடைமுறைப்படுத்துவதற்கும் புள்ளிவிபரங்களானது முக்கியத்துவம் பெறுகின்றது எனவும், துல்லியமான புள்ளிவிபரங்களை வினைத்திறமையாகப் பெற்று அறிக்கையிடுவதற்கு இப் பயிற்சி முக்கியத்துவம் பெறுவதாக தெரிவித்ததுடன், தற்போது நாட்டில் நடைபெற்று முடிந்த கட்டடங்களை நிரற்படுத்தும் செயற்றிட்டத்தில் அகில இலங்கை ரீதியாக யாழ்ப்பாண மாவட்டமானது முதலாவதாக இச் செயற்றிட்டத்தினை நிறைவேற்றியமைக்காக பிரதேச செயலாளர்களுக்கும், மாவட்ட புள்ளிவிபரப் பிரிவின் பிரதிப் பணிப்பாளருக்கும் மற்றும் புள்ளிவிபர உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாவட்டச் செயலக புள்ளிவிபரப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திரு. ம. வித்தியானந்தநேசன் அவர்களால் நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக விபரிக்கப்பட்டது.
பிரதேச செயலக புள்ளிவிபர உத்தியோகத்தர்கள், புள்ளிவிபர உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இப் பயிற்சியில் கலந்துகொண்டார்கள்.

நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தல்களுக்கு குழுக் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவாட்சி அலுவலர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும், தெரிவாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் (12.08.2024) பி. ப 03.00 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க. ஸ்ரீமோகனன், உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ. கி. அமல்ராஜ், உதவி மாவட்டச் செயலாளர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் உள்ளடங்கலாக உதவித் தெரிவாட்சி அலுவலர்களாக நியமிக்கப்பட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும், தெரிவாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் (10.08.2024) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தேர்தல் ஆணைக்குழு மேலதிக ஆணையாளர் திரு. சிந்தக குலரட்ண, பொலிஸ் திணைக்கள பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. றுவான் குணசேகர, பொலிஸ் திணைக்கள தேர்தல்கள் பணிப்பாளர் திரு அசோக தர்மசேன, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. தர்மபால, யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. ஜே. ஏ. ஹாலிங்க ஜெயசிங்க , உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ. கி. அமல்ராஜ், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், முறைப்பாட்டு முகாமைத்துவப் பிரிவின் உதவித் தெரிவாட்சி அலுவலர் உட்பட சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
இக் கலந்துரையாடல் சனாதிபதி தேர்தல்கள் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு ஆராயப்பட்டன.

வளிச்சீராக்கி பொறிவலர்களுக்கான தேசிய தொழில் தகைமை மட்டம் (NVQ) சான்றிதழ் வழங்கும் இலவச திட்டத்தினை செயல்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் (10.08.2024) காலை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் வளிச்சீராக்கி பொறிவலர்கள் கலந்து கொண்டார்கள்.

யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்கும் யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு. J. A. ஹாலிங்க ஜெயசிங்க அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (08.08.2024) பி. ப. 4.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பில் நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல்கள் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.








