இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனங்களில் ஒன்றான அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒஃப் சிலோன் லிமிடெட் (Associated Newspapers of Ceylon Limited – Lake House) தனது 100ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், யாழ்ப்பாணக் கிளையின் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்வொன்று இன்று (20.11.2026) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் மற்றும் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளான ஸ்ரீ சங்கரன் ராஜகோபாலன், ஸ்ரீ நாகராஜன் ராமசாமி ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர். அதிதிகள் மாலை அணிவித்து மரியாதையுடன் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றலும் சர்வமதத் தலைவர்களின் ஆசியுரைகளும் இடம்பெற்றன. தொடர்ந்து, லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பிரதம ஆசிரியர் குணராசா வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அதிதிகளின் வாழ்த்துரைகள் இடம்பெற்றன.
அரசாங்க அதிபரின் வாழ்த்துரை :
ஒரு ஊடக நிறுவனம் நூறு ஆண்டுகளைக் கடந்து தனது பணியைத் தொடர்ந்து முன்னெடுப்பது மிகவும் சவாலானதும், இரட்டிப்புப் பெருமைக்குரியதுமான விடயமாகும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். இன்றைய காலமாற்றத்திற்கேற்ப அச்சு ஊடகங்களின் செயற்பாடுகளும் வாசிப்புப் பழக்கங்களும் மாற்றமடைந்து வருகின்ற போதிலும், லேக் ஹவுஸ் நிறுவனம் மூன்று மொழிகளிலும் தனது பத்திரிகைகளை வெளியிட்டு வருவது பாராட்டுக்குரிய விடயமாகும். குறிப்பாக, தினகரன் பத்திரிகை 94 ஆண்டுகளாகத் தமிழ்மொழியில் தனது காத்திரமான ஊடகப் பணியை முன்னெடுத்து, மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது. அதேபோன்று தினமின மற்றும் டெய்லி நியூஸ் ஆகிய பத்திரிகைகளும் தத்தமது மொழிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றன. ஊடகங்களின் மிக முக்கியமான அடையாளம் அவற்றின் நம்பகத்தன்மையாகும். அச்சு ஊடகமாக இருந்தாலும் இலத்திரனியல் ஊடகமாக இருந்தாலும் மக்களுக்கு உண்மையானதும் நம்பகமானதுமான தகவல்களை வழங்குவதில் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஊடகங்களின் நம்பகத்தன்மையை வளர்ப்பதில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப லேக் ஹவுஸ் நிறுவனம் இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் தனது செய்திப் பணிகளை விரிவுபடுத்தி வருவது வரவேற்கத்தக்கது. காலமாற்றத்தில் பல்வேறு புதிய ஊடக வடிவங்கள் உருவாகியுள்ள போதிலும், அச்சு ஊடகங்களின் தனித்துவமும் அவற்றின் முக்கியத்துவமும் தொடர்ந்து நிலைத்திருக்கும். எதிர்காலத்தில் மக்கள் மீண்டும் அச்சு ஊடகங்களை அதிகளவில் நாடக்கூடிய சூழலும் உருவாகலாம். அச்சு ஊடகங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது அதிக செலவுகளையும் வளங்களையும் கோரும் சவாலான பணியாகும். இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் நூறு ஆண்டுகளாக இலங்கையின் ஊடகத்துறையில் தனித்துவமான அடையாளத்துடன் தனது பணியை முன்னெடுத்து வரும் லேக் ஹவுஸ் நிறுவனம் பாராட்டுக்குரியது. இலங்கையின் பத்திரிகை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இந்தச் சாதனைக்குப் பங்களித்த நிறுவனத்தின் பணிப்பாளர் குழாம், ஆசிரியர் குழாம், பிராந்திய ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். ஊடகத் தர்மத்தையும் நம்பகத்தன்மையையும் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
விசேட பதிப்பின் பிரதிகள் வழங்கல் :
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் 100ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட விசேட பதிப்பின் பிரதிகள் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிகை முகவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் குடும்பம் சார்ந்த மாற்றுப் பராமரிப்பு முறையை வலுப்படுத்துவதையும், சிறுவர் பராமரிப்பு முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான வடக்கு மாகாண பங்குதாரர் பயிற்சிப்பட்டறை இன்று (20.11.2026) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
வரவேற்புரை :
நிகழ்வில் வரவேற்புரையையும் பயிற்சிப்பட்டறையின் நோக்கம் மற்றும் அறிமுகத்தையும் SOS Children's Villages Sri Lanka நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. எஸ். பத்மராஜா வழங்கினார்.
நோக்கம் :
சிறுவர்களின் சிறந்த நலன், உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், நிறுவனப் பராமரிப்பில் தங்கியிருக்கும் சிறுவர்களுக்கு குடும்பச் சூழலில் வளர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், குடும்பம் சார்ந்த மாற்றுப் பராமரிப்பு முறைகளை வலுப்படுத்துவதற்கும் இப் பயிற்சிப்பட்டறை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
அரசாங்க அதிபரின் ஆரம்ப உரை :
குடும்ப உறவுகளுடன் இணைந்த சிறுவர் பராமரிப்பு முறையை வலுப்படுத்துவது காலத்தின் தேவையாகும் – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சிறுவர் இல்லங்களில் சிறுவர்களைப் பராமரிப்பதை விடுத்து, அவர்களை அவர்களது குடும்ப உறவினர்களுடன் இணைத்து வளர்ப்பதற்கான குடும்ப அடிப்படையிலான மாற்றுப் பராமரிப்பு முறைகளை வலுப்படுத்துவது காலத்தின் தேவையாகும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆரம்ப காலங்களில் நெருக்கடியான சூழலில் வாழ்ந்த சிறுவர்களின் பாதுகாப்புக்காக சிறுவர் இல்லங்கள் உருவாக்கப்பட்டன. எனினும், நிறுவனப் பராமரிப்பு முறைகள் சில சந்தர்ப்பங்களில் குடும்ப உறவுகளைப் பிரிப்பதுடன் சமூகப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தியுள்ளன. முன்னர் அம்மம்மா, சித்தி, பெரியம்மா போன்ற உறவினர்களிடம் சிறுவர்கள் இயல்பாக வளர்க்கப்பட்டனர். ஆனால், இன்று உறவினர்களின் பராமரிப்புக்குக்கூட பொருளாதார உதவிகளை வழங்க வேண்டிய சமூகச் சூழல் உருவாகியுள்ளது. எனவே, சிறுவர்களை அவர்களது குடும்ப உறவுகளுடன் இணைத்து வளர்ப்பதுடன், அவர்களுக்குத் தேவையான தொடர்ச்சியான உதவிகளையும் கண்காணிப்பையும் வழங்க வேண்டும்.
சிறுவர்களின் உரிமைகள், உணர்வுகள் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் அரச உத்தியோகத்தர்களுக்கு முக்கிய சமூகப் பொறுப்பு உள்ளது. சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். மாதாந்த மற்றும் காலாண்டுக் கூட்டங்களுடன் மட்டுப்படாமல், களமட்டத்தில் சிறுவர்களின் நலன்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். அரச நிறுவனங்களும் தன்னார்வ அமைப்புகளும் இணைந்து செயற்படுவதன் மூலமே பாதுகாப்பான சிறுவர் சூழலை உருவாக்க முடியும். அந்த வகையில், குடும்ப உறவுகளைப் பாதுகாத்து, சிறுவர்களுக்கான குடும்ப அடிப்படையிலான மாற்றுப் பராமரிப்பு முறையை வலுப்படுத்துவதற்கு SOS சிறுவர் கிராமம் முன்னெடுக்கும் இந்நிகழ்ச்சித்திட்டம் வரவேற்கத்தக்கது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துரைகள் :
இதன்போது, வடக்கு மாகாணத்தில் பெற்றோரின் பராமரிப்பின்றி வாழும் சிறுவர்களின் தேவைகள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தங்களின் முக்கியத்துவம் தொடர்பில் மாகாண நன்னடத்தை ஆணையாளர் திருமதி. எஸ். சி. என். கமல்ராஜன் அவர்களின் கருத்துரை இடம்பெற்றது. ஒவ்வொரு சிறுவரும் ஒரு குடும்பத்திற்குத் தகுதியானவர்: குடும்பம் சார்ந்த மாற்றுப் பராமரிப்பை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் உளநல மருத்துவ நிபுணர் வைத்தியர் S. சிவதாஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, பராமரிப்பு சீர்திருத்தச் செயல்முறையைப் புரிந்துகொள்வதற்கான ஊடாடும் வினாடி வினா நிகழ்வும், சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தங்களின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் தொடர்பான குழுச் செயற்பாடுகளும் இடம்பெற்றன. அத்துடன், வடக்கு மாகாணத்தில் தற்போது நடைமுறையிலுள்ள மாற்றுப் பராமரிப்பு முறைகள், அவற்றில் காணப்படும் சவால்கள், இடைவெளிகள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பில் குழுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக, குடும்பப் பிரிவினையைத் தடுத்தல், உறவினர் பராமரிப்பு, குடும்பங்களுடன் மீளிணைத்தல் மற்றும் சமூகத்தில் மீள ஒருங்கிணைத்தல், தரமான நிறுவனப் பராமரிப்பு, மாற்றுப் பராமரிப்பு ஒருங்கிணைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. மேலும், குடும்பம் சார்ந்த மாற்றுப் பராமரிப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளைச் சிறப்பாகச் செயற்படுத்துவதற்கான பரிந்துரைகள், கலந்துரையாடல்களின் முடிவுகள், முக்கிய தீர்மானங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன. இக் கலந்துரையாடலில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், நன்னடத்தை உத்தியோகத்தர்கள், SOS சிறுவர் இல்ல பணிப்பாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான நான்காம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (19.11.2026) காலை 9.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், உள்ளகக் கணக்காய்வில் காணப்படும் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து திருத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். நிர்வாக நடைமுறைகள் மற்றும் ஆவணப்படுத்தல்களை முறையாகப் பேணாமையே கணக்காய்வு வினாக்களுக்கான முக்கிய காரணங்களாகும் எனக் குறிப்பிட்ட அவர், பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார். மேலும், மாவட்டத்தின் அபிவிருத்திக்காகப் பெருமளவு நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறுகின்ற நிலையில், அவற்றை வினைத்திறனாகவும் உரிய முறையிலும் பயன்படுத்துவதுடன், உள்ளகக் கணக்காய்வு நடைமுறைகளை வலுப்படுத்தி எதிர்காலத்தில் கணக்காய்வுக் குறைபாடுகளையும் வினாக்களையும் குறைப்பதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் கணக்காய்வு முகாமைத்துவ திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திரு. ரி.பிரபாகரன், தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் மாவட்ட உதவி கணக்காய்வாளர் நாயகம் திரு. H. M. U. K. குமார மற்றும் பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு. எஸ். ரமேஷ்குமார் ஆகியோர் நேரடியாகக் கலந்து கொண்டனர்.
மேலும் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வடக்கு மாகாண அலுவலகத்தின் சிரேஷ்ட உதவி கணக்காய்வாளர் திரு. B.A ஜெறோஸ் நிகழ்நிலை ஊடாகக் கலந்து கொண்டார். இதன்போது மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் கணக்காய்வு முகாமைத்துவம் தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன், பிரதம பொறியியலாளர் திரு. க. திருக்குமார், திட்டமிடல் பணிப்பாளர் திரு. இசுரேந்திரநாதன் உள்ளிட்ட மாவட்ட செயலகப் பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் கணக்காளர்கள், துறைசார் கிளைத்தலைவர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (19.11.2026) பி. ப 02.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது, மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் பௌதீக மற்றும் நிதிசார் முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. மேலும், ஒவ்வொரு பிரதேச செயலாளரும் தமது பிரதேச செயலகப் பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையினை முன்வைப்பின் (Presentation) ஊடாகச் சமர்ப்பித்ததுடன், திட்டங்களின் பௌதீக மற்றும் நிதிசார் முன்னேற்றங்கள், அடைந்துள்ள இலக்குகள் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் விளக்கமளித்தனர். குறிப்பாக, பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டம், சமூக சக்தி திட்டம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன. மேலும், நிறைவடைந்த திட்டங்கள், இதுவரை நிறைவடையாத திட்டங்கள் மற்றும் அவற்றை உரிய காலப்பகுதிக்குள் நிறைவு செய்வதில் எதிர்நோக்கப்படும் நடைமுறைச் சவால்கள் மற்றும் தடைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, திட்டங்களை விரைந்து நிறைவு செய்வதற்கும், அவற்றின் முன்னேற்றத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார். இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் பிரதி/உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனர்த்த நிவாரண மற்றும் மீட்புப் பணிகள், டித்வா சூறாவளிக்குப் பின்னரான மக்களின் மீட்பு நடவடிக்கைகள், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரணங்கள் மற்றும் நலன்புரிச் சேவைகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட சர்வமத உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்கேற்புடன் இன்றைய தினம் (18.11.2026) காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது.
நோக்கம் :
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனர்த்த நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பான தகவல்களை சமூக மட்டத்திற்குக் கொண்டு செல்வதுடன், பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான அரசாங்க உதவிகளையும் உரிமைகளையும் தடையின்றிப் பெற்றுக்கொள்வதற்கு சர்வமத அமைப்புகளின் பங்களிப்பை வலுப்படுத்துவதும் இச்செயலமர்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
இலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வரவேற்புரை :
இச்செயலமர்வில் யாழ்ப்பாண மாவட்ட சர்வமதத் குழுவின் பிரதிநிதியும், SOND நிறுவன இணைப்பாளருமான திரு. கணபதிப்பிள்ளை கௌரிரூபன் வரவேற்புரையாற்றினார்.
அறிமுகவுரை :
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் திருமதி. நிரோஷா அன்டனி அவர்கள், திட்டத்தின் நோக்கம் மற்றும் உள்ளடக்கம் தொடர்பான அறிமுகவுரையை நிகழ்த்தினார். இதன்போது, அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் மக்களுக்கு அரசாங்கத்தின் சேவைகள் மற்றும் நிவாரண உதவிகளை உரிய முறையில் பெற்றுக்கொடுப்பதில் சர்வமதக் குழுக்கள் முக்கிய இடைநிலை இணைப்பாளர்களாகச் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், அனர்த்தங்களின்போது உயிரிழப்புகள், வீடுகள் மற்றும் உடைமைகளின் இழப்புகள் மட்டுமன்றி, பிறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இழத்தல், சிறுவர்களின் கல்வி பாதிக்கப்படுதல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன எனக் குறிப்பிட்டார். இவ்வாறான சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் இடையில் பாலமாகச் செயற்பட்டு, அவர்களுக்குத் தேவையான அரச சேவைகள், நிவாரணங்கள் மற்றும் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க சர்வமதக் குழுக்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் கல்வியைத் தொடர்வதில் எதிர்கொள்ளும் தடைகள், ஆவணங்களை மீளப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பற்ற வாழ்விடங்களில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வமதக் குழு உறுப்பினர்கள் தெளிவான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
குறிப்பாக, மலையகத் தொழிலாளர்கள் ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) போன்ற தொழிலாளர் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் இடைத்தரகர்களின் தலையீடுகள் குறித்தும் எடுத்துரைத்தார். இத்தகைய பிரச்சினைகளில் மக்களுக்கு உரிய வழிகாட்டல்களை வழங்கி, அரச நிறுவனங்களுடன் இணைந்து தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது அவசியம் எனக் குறிப்பிட்டார். அத்துடன், இளைஞர்களை வலுவூட்டுவதன் மூலம் எதிர்காலத்தில் அனர்த்த முகாமைத்துவம், சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் அரச சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தல் போன்ற பணிகளில் அவர்களையும் திறம்பட ஈடுபடுத்த முடியும் எனத் தெரிவித்தார். சர்வமதக் குழுக்களின் செயற்பாடுகள் சமாதானம், நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை மேம்படுத்துவதுடன் நின்றுவிடாமல், மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் சமூகப் பொறுப்பையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும் எனவும் திருமதி. நிரோஷா தெரிவித்தார்.
அரசாங்க அதிபரின் கருத்துரை :
அனர்த்த நிலைமைகளின்போது அரசாங்க உத்தியோகத்தர்கள் மாத்திரமன்றி, மதம், இனம், மொழி வேறுபாடுகளைக் கடந்து சர்வமதத் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய சமாதானப் பேரவை நீண்டகாலமாக இவ்வாறான கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றது. அதன் பணிப்பாளர் கலாநிதி ஜெகத் பெரேரா மற்றும் திட்ட முகாமையாளர் திருமதி. நிரோஷா அன்டனி உள்ளிட்ட பொறுப்பாளர்களின் ஒத்துழைப்புடன், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் அனர்த்தத்திற்குப் பின்னரான மீட்பு நடவடிக்கைகள் தொடர்பில் எமது மாவட்டத்திலும் விரிவான தெளிவூட்டலை ஏற்படுத்த வேண்டிய தேவை உணரப்பட்டது. இலங்கை பல்வேறு இயற்கை அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக, சுனாமிப் பேரனர்த்தம் எமது நாட்டின் சமூக, பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்படுத்திய தாக்கங்கள் மறக்க முடியாதவை. இத்தகைய அனுபவங்கள் எதிர்கால அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வையும் தயார்நிலையையும் எம்மத்தியில் ஏற்படுத்தியுள்ளன. டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக, இம்முறை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட நிவாரணத் திட்டங்களும் ஒதுக்கப்பட்ட நிதியும் முன்னெப்போதைய அனர்த்தங்களிலும் காணப்படாத வகையில் விரிவானதாக அமைந்துள்ளன. அதேவேளை, அதிகளவிலான நிவாரண உதவிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, அவற்றை உரிய முறையில் பகிர்ந்தளிப்பது மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளைச் சரியான முறையில் முகாமைத்துவம் செய்வது போன்ற விடயங்களில் பல்வேறு சவால்களும் காணப்பட்டன. குறிப்பாக, கிராம மட்டத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் இத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே, அனர்த்தங்களின்போது நிவாரணங்களை வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல. பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான தேவைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கான உதவிகள் உரிய முறையில் சென்றடைவதையும் உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு அரச நிறுவனங்களுக்கும் சமூக அமைப்புகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது.
அந்த வகையில், இக்கலந்துரையாடல் கடந்தகால அனர்த்த அனுபவங்களை மீளாய்வு செய்வதற்கும், எதிர்காலத்தில் இத்தகைய அனர்த்தங்கள் ஏற்படும்போது மக்களை எவ்வாறு பாதுகாப்பது, பாதிக்கப்பட்ட சமூகங்களை எவ்வாறு மீட்டெடுப்பது மற்றும் அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு மீளக் கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் பயனுள்ள ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும், டித்வா சூறாவளியினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள், அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி, அனர்த்தப் பாதிப்புகள் தொடர்பான அறிக்கையிடல் நடைமுறைகள் ஆகியன தொடர்பில் விளக்கமளித்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான அரசாங்க உதவிகள், நலன்புரி உரிமைகள், பொருளாதார உள்ளடக்கத்தை மேம்படுத்தும் சேவைகள் மற்றும் அரசாங்கத்தின் ஊடாகக் கிடைக்கப்பெறும் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். அனர்த்தங்களிலிருந்து மக்களை மீட்டெடுப்பதில் அனைவரும் பொறுப்புணர்வுடன் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே பாதிப்புகளைக் குறைத்து, சமூகத்தின் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கேள்வி–பதில் அமர்வு :
தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடல் மற்றும் கேள்வி–பதில் அமர்வில் சர்வமதப் பிரதிநிதிகள் தமது கருத்துக்களையும் கேள்விகளையும் முன்வைத்தனர். இதன்போது, முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பதிலளித்து, உரிய விளக்கங்களையும் தெளிவுபடுத்தல்களையும் வழங்கினார்.
நன்றியுரை :
யாழ்ப்பாண மாவட்ட சர்வமதக் குழுவின் இணைப்பாளர் திருமதி. எஸ். ஜென்சி அவர்களால் நன்றியுரை ஆற்றப்பட்டது. இச்செயலமர்வில் சர்வமதத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு. என். தயாபரன், சர்வமதத் குழுவின் உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர்கள் சேவைகள் மன்ற பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.









