நிலவர அறிக்கை 2026.10.27
பிற்பகல் 3.00 மணி
கடந்த இரு தினங்களாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் அனர்த்தத்தினால் 11 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் அனர்த்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கோப்பாய் பிரதேசத்தில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும், பருத்தித்துறை பிரதேசத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேரும், கரவெட்டி பிரதேசத்தில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 6 பேரும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வெள்ள அனர்த்தத்தினால் வீடுகளுக்கும் பகுதியளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கோப்பாய் பிரதேசத்தில் 01 வீடும், பருத்தித்துறை பிரதேசத்தில் 7 வீடுகளும், கரவெட்டி பிரதேசத்தில் 01 வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மேலும், கரவெட்டி பிரதேசத்தில் மின்னல் தாக்கத்தினால் ஒருவர் காயமடைந்துள்ளார்.
“சமூக பலத்திற்கு புதியதோர் பலம்” எனும் தொனிப்பொருளிலான வட மாகாண சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான விழிப்பூட்டல் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று(27.10.2026) யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபமொன்றில் காலை 9.00மணிக்கு நடைபெற்றது. சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக முத்துகல தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் கெளரவ வசந்த பியதிஸ்ஸ பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணாநாதன் இளங்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசாங்க அதிபர் அவர்களின் வரவேற்புரை :
இன்றைய நிகழ்விற்கு வருகை தந்த
கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்ட பிரதி அமைச்சர் கௌரவ வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணநாதன் இளங்குமரன் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன், சமுர்த்தித் திட்டத்தைத் தேசிய ரீதியில் முன்னெடுத்துச் செல்லும் செயற்பாடுகளுடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பொருளாதார வலிமையை அதிகரிப்பது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும் எனவும், நாம் அனைவரும் ஒற்றுமையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவதன் மூலம், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனங்களுக்கு அமைவாக இச்செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார். அந்த வகையில், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் இங்கு ஒன்றுகூடியிருப்பது, வடக்கு மாகாணத்தைப் பொருளாதார வலிமை மிக்க மாகாணமாகக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளமாக அமைகின்றது. இன்றைய நிகழ்வை ஏற்பாடு செய்த கௌரவ பிரதி அமைச்சருக்கும், சமுர்த்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கும் தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். சமுர்த்தி தொடர்பான செயற்பாடுகளில் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களும் கடந்த காலங்களில் முன்னிலை வகித்துள்ளன. உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான சேவையின் மூலம் பல்வேறு விருதுகளையும் எமது மாவட்டங்கள் பெற்றுள்ளன. உத்தியோகத்தர்களின் திறமையான, அர்ப்பணிப்புமிக்க பங்களிப்பே இவ்வெற்றிகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
இந்த வெற்றிகளை உத்தியோகத்தர்களுக்கு மட்டுமே உரித்தான வெற்றிகளாகக் கருத முடியாது. ஏனெனில், அவர்கள் ஆற்றிய பணிகளின் ஊடாகப் பல சாதாரண மக்களும் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதற்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் எனவே, எமது மாவட்டங்களின் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் கடமையாற்றி வருகின்றனர் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்வதாக த் தெரிவித்தார். இன்றைய நிகழ்வு உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளுக்கு மேலும் வலுச்சேர்ப்பதுடன், அவர்களின் ஆற்றல்களையும் திறன்களையும் மேம்படுத்தும் ஒரு வாய்ப்பாக அமையும் எனவும், அதேவேளை, அவர்கள் சேவையாற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதார நிலையையும் வலுப்படுத்துவதற்கும் இந்நிகழ்வு பங்களிப்புச் செய்யும் என எதிர்பார்ப்பதாகவும், அரசாங்கத்தின் இலக்குகளுக்கும் கொள்கைகளுக்கும் அமைவாக, சமுர்த்தி சார்ந்த செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என தெரிவித்தார்.
வலுவூட்டல் கருத்துரைகள் :
சமுர்த்தி வேலைத்திட்டத்தின் சமூக அடிப்படையிலான செயற்பாடுகள், வங்கிக் கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் தொடர்பான விடயங்கள் குறித்து சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் லால் கருணாதிலக உரையாற்றினார். தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணாநாதன் இளங்குமரன் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலாசார நிகழ்வுகளுடன், பிரதம விருந்தினரான பிரதி அமைச்சர் கெளரவ. வசந்த பியதிஸ்ஸவின் சிறப்புரையும் இடம்பெற்றது. மேலும், “சமூக பலத்திற்கு புதியதோர் பலம்” என்ற தொனிப்பொருளின் கீழ், சமுர்த்தி வேலைத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் சமூக வலுவூட்டல் தொடர்பான கருத்துரையும் வழங்கப்பட்டது. சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் பொன்னம்பலம் ஸ்ரீவர்ணன் நன்றியுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நிகழ்வு நிறைவடைந்தது. இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர்கள், ஐந்து மாவட்டங்களின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

15 ஆளுமைகளுக்கு ‘யாழ்முத்து விருது’ வழங்கிக் கௌரவிப்பு யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (23.10.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கலை, இலக்கியம், கூத்து, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமது சிறந்த பங்களிப்பை வழங்கிய யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேசச் செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த ஆளுமைகளுக்கு மதிப்புமிக்க ‘யாழ்முத்து விருது – 2026’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்ட ஆளுமைகள் மற்றும் அவர்களின் விபரங்கள் பின்வருமாறு:
- ஊர்காவற்றுறை – திரு. இராயப்பு லூயிஸ் – கூத்து
- உடுவில் – திருமதி. சிவலிங்கம் இராஜினிதேவி – இலக்கியம்
- நெடுந்தீவு – திரு. சந்தியாப்பிள்ளை தோமஸ் – நாடகம்
- காரைநகர் – திரு. திருச்செல்வம் தவத்தினம் – இலக்கியம்
- கோப்பாய் – திரு. செல்லத்துரை வீரவலிங்கம் – இலக்கியம்
- வேலணை – திரு. நாகலிங்கம் சுகுமார் – இலக்கியம்
- சண்டிலிப்பாய் – திரு. வைத்திலிங்கம் கமலநாதன் – நாடகம்
- தெல்லிப்பழை – திரு. சங்கரப்பிள்ளை கிருபானந்தன் – இசை நாடகம்
- யாழ்ப்பாணம் – செல்வி சண்முகராசா விஜயலட்சுமி – இசை
- சங்கானை – திருமதி. பொன்குணரத்தினம் திலகவதியார் – இசை
- சாவகச்சேரி – திருமதி. ஈழநேசன் புனிதகுமாரி – இசை
- கரவெட்டி – திருமதி. நாகேந்திரன் அனந்தராணி – நாடகம்
- நல்லூர் – திருமதி. சிவபாலன் லைதகுமாரி – இசை
- பருத்தித்துறை – திரு. பொன்னம்பலம் சத்திவேல் – இசைத்துறை
- மருதங்கேணி – திரு. அருணாசலம் விஜயரட்ணம் – நாடகம்


நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் குடிபெயர்வு தொடர்பு அதிகாரியும் கொன்சியூலருமான திருமதி சோன்யா டக்ளஸ் (Sonya Douglas) அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (26.10.2026) திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் குடிபெயர்வு தொடர்பான பிரச்சினைகள், ஐரோப்பிய நாடுகளுக்கான சட் ட விரோத ஆட்கடத்தல் (Human Trafficking) , சட்ட விரோத புகலிடக் கோரிக்கை தொடர்பாகவும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்கு செல்பவர்கள் தொடர்பான சமூகப் போக்குகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தின் உள்ளூர் நிர்வாகச் செயற்பாடுகள், சமூகப் பொருளாதார வளர்ச்சிகள் மற்றும் மாவட்டத்திலுள்ள சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான விடயங்களையும் திருமதி சோன்யா டக்ளஸ் அவர்கள் அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்துகொண்டார். யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் குடிபெயர்வு தொடர்பான விடயங்கள் குறித்த தெளிவான விடயங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

15 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 15 இளங்கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கௌரவிப்பு யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (23.10.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கலை, இலக்கியம், கூத்து, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமது சிறந்த பங்களிப்பை வழங்கிய யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேசச் செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு ‘இளங்கலைஞர் விருது’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இளங்கலைஞர் விருது பெற்றவர்கள் மற்றும் அவர்களின் விபரங்கள் பின்வருமாறு:
1. ஊர்காவற்றுறை – திரு. சிவந்தன் தாரணி – நாடகம்
2. உடுவில் – திரு. குகேந்திரன் அனுஷன் – இசை
3. காரைநகர் – செல்வி தர்மலிங்கம் யஜந்தினி – நடனம்
4. வேலணை – திரு. பத்மநாதன் குகராஜ் – வாத்தியக்கலை
5. தெல்லிப்பழை – திரு. பிரான்சிஸ் சகாயநாதன் அன்ரனிறோய் – வாத்தியக்கலை
6. நெடுந்தீவு – திரு. ஜோன் லாசரஸ் – கூத்து
7. கோப்பாய் – திருமதி. ஹவிக்குமார் சித்திரா – இசை
8. சண்டிலிப்பாய் – திருமதி. கங்கைகோபாலன் செல்வப்பிரியா – நடனம்
9. யாழ்ப்பாணம் – திரு. காராளசிங்கம் சுரேன் – நாடகம்
10. சங்கானை – திரு. தவபாலசிங்கம் துலக்க்ஷன் – நாடகம்
11. சாவகச்சேரி – திரு. சிறி விஜயகாந் யதுர்ஷன் – வாத்தியக்கலை
12. கரவெட்டி – திரு. மதியூகநாதன் மனுசங்கர் – வாத்தியக்கலை
13. நல்லூர் – திரு. மனோகரன் கஜகிருஷ்னா – நாடகம்
14. பருத்தித்துறை – திரு. மதுஷன் கார்த்திகா – நடனம்
15. மருதங்கேணி – திரு. தேவதாஸ் யூலிடெனீஸ் – கூத்து








