தமிழ் இணையக் கல்விக்கழகமும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்திய வடக்கு மாகாணத்தின் 9ஆவது பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணம், தென்மராட்சி, கொடிகாமத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் இன்று (01.11.2026) வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழியல் சிறப்புப் பட்டக் கற்கைநெறியைப் பூர்த்தி செய்த 70 மாணவர்கள் இந்நிகழ்வில் தமது பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். அத்துடன், முதல் வகுப்பில் சிறப்புச் சித்தி பெற்ற ஐந்து மாணவர்கள் “ராஜராஜ சோழன்” விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். மேலும், பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் மொழிக் கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கும் இதன்போது பட்டயச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வடக்கு மாகாண இணைப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான க. ரஜனிகாந்தன் தலைமையில் இடம்பெற்ற இப்பட்டமளிப்பு விழாவில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி தி. விக்கினேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி வைத்தனர். இந் நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் வடக்கு மாகாண சிரேஷ்ட சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் எம். ஏ. எம். அனஸ், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வடக்கு மாகாண விரிவுரையாளர்களான சி. இளந்திரையன் மற்றும் க. முருகதாஸ், பிரெஞ்சு மொழி விரிவுரையாளர் துஷ்யந்தி ரஜனிகாந்தன், ஜேர்மன் மொழி விரிவுரையாளர் ஆர். மயூரதன் ஆகியோரும் விருந்தினர்களாகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். நிகழ்வின் இறுதியில் விருந்தினர்கள் கெளரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

“தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய தூய்மைப்படுத்தல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான மூன்றாவது மாவட்ட வேலைத்திட்டம் இன்றைய தினம் (31.10.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணநாதன் இளங்குமரன் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் “தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) திட்டத்தின் மேலதிக பணிப்பாளர் திரு. நிஷாந்த ஆல்வின் ஆகியோர் கலந்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் “அத்தம” நிகழ்ச்சித்திட்டத்தின் அக்டோபர் மாதத்திற்கான மாவட்ட நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் காலை 8.00மணிக்கு ஆரம்பமாகி, கச்சேரி–நல்லூர் வீதி, முத்திரைச் சந்தி வீதி வரையான J/76, J/77, J/91, J/92, மற்றும் J/109 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் வீதிச் சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் இவ்வேலைத்திட்டம் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது. “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் “அத்தம” தேசிய தூய்மைப்படுத்தல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் மூன்றாவது கட்டம் இன்றையதினம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய, நாடளாவிய ரீதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை மையமாகக் கொண்டு, ஒவ்வொரு கிராமத்தின் பொதுவான தேவைகளை இனங்கண்டு அவற்றுக்குத் தீர்வு காணும் நோக்கில் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் கீழ் கிராமப்புற வீதிகளைத் தூய்மைப்படுத்துதல், கைவிடப்பட்டுள்ள பொதுக் கிணறுகளை மீளப் பயன்படுத்தக்கூடிய வகையில் புனரமைத்தல் மற்றும் பிரதேசங்களின் தேவைகளுக்கு ஏற்ப விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
நோக்கம் :
பொதுப் பணிகளுக்காக மக்களின் சிரமதானப் பங்களிப்பைப் பெற்றுக்கொண்டு, சமூகத்தின் பிரச்சினைகளுக்குக் கூட்டாகத் தீர்வு காணும் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதே இவ்வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இதன்போது வீதிகள் தூய்மைப்படுத்தப்பட்டதுடன், பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பொது இடங்களைத் தொடர்ச்சியாகத் தூய்மையாகப் பேணுவதன் அவசியத்தை உணர்த்துவதற்கும் இந்நிகழ்வு முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது.
அரசாங்க அதிபரின் தலைமையுரை :
நிகழ்வில் தலைமை உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், “அத்தம” நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக பிரதேச மற்றும் கிராம மட்டங்களில் தூய்மையான சூழலை உருவாக்கும் நோக்கில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். நிகழ்வில் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் பங்கேற்ற கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்ற அவர், அவர்களின் பங்களிப்புக்குத் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டு, ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு “கிளீன் ஸ்ரீலங்கா” செயற்றிட்டங்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் மாவட்டத்தை தூய்மையானதும், பசுமையானதும், பாதுகாப்பானதுமான சூழலைக் கொண்ட மாவட்டமாக உருவாக்குவதன் மூலம் அதன் சகல துறைகளிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவித்த அரசாங்க அதிபர், “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “அத்தம” நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் உரை :
மக்களின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் தூய்மையான நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் – கெளரவ க. இளங்குமரன் நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணநாதன் இளங்குமரன் அவர்கள், ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய “அத்தம” வேலைத்திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ஒவ்வொரு மாதத்தின் இறுதி சனிக்கிழமையையும் தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கி, நாடளாவிய ரீதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சுற்றுச்சூழல் தொடர்பான மக்களின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை அழகானதும் தூய்மையானதுமான நாடாக மாற்ற முடியும் எனத் தெரிவித்த அவர், ஒவ்வொரு பொதுமக்களும் குப்பைகளை வீதிகளிலும் பொது இடங்களிலும் வீசாமல், அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட பொருத்தமான இடங்களில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஒரு கிராமத்தின் சூழலை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட “அத்தம” வேலைத்திட்டம் இன்று நாடு முழுவதும் மக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தூய்மையான சூழலை உருவாக்கும் இப்பயணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான ஒருங்கிணைந்த செயற்பாடுகளின் மூலம் மகிழ்ச்சியானதும், அழகானதுமான நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கலந்துகொண்டவர்கள் :
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) உள்ளிட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள், மாநகர சபை ஆணையாளர், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர், சாரணர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், துரறசார் திணைக்கள உத்தியோகத்தர்கள், இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்ட உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.

கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்நோக்கும் நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் அவற்றின் அபிவிருத்திக்கான தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து, தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் விசேட கலந்துரையாடல் இன்று (30.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துதல், கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறிதல் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை முன்வைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணநாதன் இளங்குமரன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட இணைப்பாளர் திரு. எஸ். கபிலன் ஆகியோர் பங்குபற்றினார்கள்.
வரவேற்புரை :
இக் கலந்துரையாடலில் கெளரவ அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் உள்ளிட்டவர்களை வரவேற்று, கூட்டுறவுத் துறை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சர் அவர்களுடன் விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தருவதாக வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் தேவைகளையும் நேரடியாக முன்வைத்து, அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கு இக்கலந்துரையாடலைப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
கெளரவ அமைச்சர் உரை :
கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், அவற்றின் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் அமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகக் கௌரவ அமைச்சர் தெரிவித்தார். கூட்டுறவுச் சங்கங்கள் மாகாண மற்றும் மத்திய அரசாங்க நிர்வாகக் கட்டமைப்புகளின் கீழ் இயங்குகின்றபோதிலும், அமைச்சரினதும் பிரதி அமைச்சர்களினதும் வழிகாட்டுதலின் கீழ் அவற்றின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். கூட்டுறவுச் சங்கங்கள் செலுத்தும் SSL வரி தொடர்பான பிரச்சினைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான தரகுப்பணத்தைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சிக்கல்கள், கொள்வனவு மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் எதிர்நோக்கும் சவால்கள் ஆகியவற்றுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு மற்றும் நெல்லை உலர்த்துவதற்கான இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கு இவ்வாண்டு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்கீழ் 50 இயந்திரங்களைக் கொள்வனவு செய்து அடையாளம் காணப்பட்ட பயனாளிகளுக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். உற்பத்தி உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்காக மேலும் 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன், 2025ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு இடையிலான தேசிய உற்பத்தித்திறன் போட்டியை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதில் வெற்றிபெறும் சங்கங்களுக்குப் பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். கூட்டுறவு மற்றும் கிராமிய வங்கிகளில் வைப்பிலிடப்பட்ட பணத்தை மீளப்பெறுவதில் வைப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், வைப்பாளர்களின் பணத்தைப் பாதுகாப்பாக மீள வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், விவசாயிகளின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்காகக் கொள்வனவு மத்திய நிலையங்களை உருவாக்குவதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாய உற்பத்திகளை மாத்தறை, குருநாகல் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். இறுதியாக, பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றின் தேவைகள் தொடர்பான கோரிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறும், அவற்றுக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள் :
அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதி வசதிகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அங்கர் பால்மா விநியோக உரிமம் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி, சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரி (SSCL) தொடர்பான பிரச்சினைகள், உலர் உணவுப் பொருட்கள் விநியோகத்தில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்குதல், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கான வங்கிக் கடன் வசதிகள், சங்கங்களின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. அத்துடன், பனை, தென்னை அபிவிருத்திச் சங்கங்களின் வருடாந்த அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சிக்கல்கள் மற்றும் அதற்கான கட்டண அதிகரிப்பு தொடர்பான பிரச்சினைகளும் கலந்துரையாடப்பட்டன. இவ்விடயங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்ட கெளரவ அமைச்சர் அவர்கள், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.
கலந்துரையாடலில் பங்குபற்றியவர்கள் :
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன், லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் திரு. கோசல, மாவட்டப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. எஸ். சிவகுமார், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், பனை, தென்னை அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

32 ஆண்டுகால அரச சேவையிலிருந்து 01.11.2026 அன்று இளைப்பாறும் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. சுப்பிரமணியம் சிவகுமாரன் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா மற்றும் பிரியாவிடை நிகழ்வு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (30.10.2026) பி. ப. 02.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
திரு. சுப்பிரமணியம் சிவகுமாரன் அவர்களின் அரச சேவைப் பயணம் :
பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. சுப்பிரமணியம் சிவகுமாரன் அவர்கள், 1994ஆம் ஆண்டு அபிவிருத்தி உத்தியோகத்தராக அரச சேவையில் இணைந்து, மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றி வந்த நிலையில், 2009ஆம் ஆண்டு உதவித் திட்டமிடல் பணிப்பாளராகப் பதவியுயர்வு பெற்று, உடுவில், தெல்லிப்பழை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலகங்களில் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, 28.04.2021 முதல் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராகப் பதவியேற்று, தனது கடமைகளைச் சிறப்பாக முன்னெடுத்து வந்த அவர், எதிர்வரும் 01.11.2026 அன்று 32 ஆண்டுகால அரச சேவையை நிறைவு செய்து ஓய்வுபெறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரவேற்புரையும் தலமையுரையும் :
இந் நிகழ்வில் வரவேற்புரையினை பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன் அவர்களால் ஆற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைமையுரை மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களால் ஆற்றப்பட்டது.
அரசாங்க அதிபர் அவர்களின் வாழ்த்துரை :
யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும், திட்டமிடல் பணிகளுக்கும் அர்ப்பணிப்புடன் பங்களிப்புச் செய்த பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. சிவகுமார் அவர்களின் 32 ஆண்டுகால அரச சேவை பாராட்டத்தக்கதென யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். திரு. சிவகுமார் அவர்களின் பணியைப் பற்றிச் சிந்திக்கும்போது, அவருக்கு ஒப்படைக்கப்பட்ட வேலையைச் சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியான விருப்பம் அவரிடம் இருப்பதை நான் அவதானித்திருக்கின்றேன். ஒரு வேலையைச் செய்வதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, மற்றவர்களைக் கொண்டு அந்த வேலையைச் செய்விப்பது. மற்றொன்று, அந்த வேலையைத் தானே பொறுப்பேற்று நிறைவேற்றுவது. சில வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பதைவிட, தானே பொறுப்பேற்று முடித்துவிடுவது சிறந்தது என்று அவர் கருதுகின்ற சந்தர்ப்பங்கள் இருந்திருக்கலாம். குறிப்பாக, நுணுக்கமான விடயங்களைக் கையாள வேண்டியபோது, அவற்றைத் தானே கவனித்து முடிக்க வேண்டும் என்ற மனப்பாங்கு அவரிடம் காணப்பட்டது. அதனால், சில வேளைகளில் அவருக்கான வேலைப்பளு அதிகரித்திருக்கக்கூடும். இருப்பினும், ஒப்படைக்கப்பட்ட பொறுப்பைச் சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும் என்ற அவருடைய அர்ப்பணிப்பே இதற்குக் காரணமாக இருந்தது என நான் கருதுகின்றேன். தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைத் துல்லியமாகவும் பொறுப்புடனும் நிறைவேற்றுவதில் அவர் தனித்துவமான ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான தகவல்களைச் சேகரித்தல், அவற்றை முறைப்படுத்துதல் மற்றும் உரிய நேரத்தில் சமர்ப்பித்தல் ஆகியவற்றில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாண்டு பிரஜா சக்தி வேலைத் திட்டத்திற்காக மாவட்டத்திற்குக் கிடைத்த 651 மில்லியன் ரூபாய் நிதியைக் குறித்த திட்டத்தின் கீழ் முழுமையாகப் பயன்படுத்துவதற்குத் தேவையான அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதிலும், திட்டங்களை உரிய முறையில் முன்னெடுப்பதிலும் அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார். எமது மாவட்டத்திற்குக் கிடைத்த 651 மில்லியன் ரூபாய் நிதியும் உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்,அதில் ஒரு பகுதியேனும் பயன்படுத்தப்படாமல் திரும்பிச் செல்லக்கூடாது என்ற நோக்கத்துடன் அவர் செயற்பட்டார். மேலும், அபிவிருத்தி திட்டங்களுக்கு கிடைக்கும் நிதியில் ஒரு ரூபாய்கூட வீணாகக்கூடாது, மாவட்டத்திற்குக் கிடைத்த நிதியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் செயற்பட்டார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வீதிகள் தொடர்பான தகவல்களைத் திரட்டி, அவற்றை வகைப்படுத்தி, முழுமையான ஆவணமாகத் தொகுத்து வழங்கியமை அவரது பணித்திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பதற்கும், வளங்களைச் சரியான முறையில் பயன்படுத்துவதற்கும் நம்பகமான புள்ளிவிபரங்கள் அவசியமானவை எனக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், இத்தகைய தகவல்களைத் துல்லியமாகப் பெற்றுக்கொள்வதில் திரு. சிவகுமார் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். ஒரு தகவல் கோரப்படும்போது, அந்தத் தகவலை மட்டும் பெற்றுக்கொள்வதுடன் நின்றுவிடாமல், அதனுடன் தொடர்புடைய ஏனைய தகவல்களையும் ஒரே தடவையில் தொகுத்து வழங்குவதற்கு அவர் முயற்சிப்பார். இதனால், திட்டமிடல் பணிகளுக்குத் தேவையான தகவல்களைத் துல்லியமாகவும் முழுமையாகவும் பெற்றுக்கொள்ள முடிந்தது. உண்மையில், தரவுகளின் அடிப்படையில்தான் அபிவிருத்தித் திட்டங்களைத் திட்டமிடவும், முன்னுரிமைகளைத் தீர்மானிக்கவும், வளங்களைச் சரியான முறையில் ஒதுக்கவும் முடியும். அந்த வகையில், திட்டமிடல் சேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட்ட உத்தியோகத்தராகத் திரு. சிவகுமார் அவர்கள் விளங்குகின்றார். முன்னாள் அரசாங்க அதிபர் அமரர் கணேஷ் அவர்கள் கடமையாற்றிய காலத்தில், நானும் திரு. சிவகுமார் அவர்களும் இணைந்து பணியாற்றிய அனுபவம் எனக்குள்ளது. அந்தக் காலப்பகுதி யுத்தம் காரணமாக மிகவும் சவாலானதாக இருந்தது. பல்வேறு தரப்பினருடனான தொடர்புகளைப் பேணுவதிலும், மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதிலும் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. யுத்தம் முடிவடைந்த பின்னரும் சுனாமி அனர்த்தம், மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றுதல் போன்ற சவால்கள் காணப்பட்டன. இத்தகைய கடினமான காலப்பகுதிகளிலும் திரு. சிவகுமார் அவர்கள் மாவட்டச் செயலகத்திலும் பிரதேசச் செயலகங்களிலும் தனது பணிகளைத் தொடர்ந்து ஆற்றியுள்ளார். பல அரசாங்க அதிபர்களின் கீழ் பணியாற்றிய அனுபவத்துடன், மாவட்டத்தின் அபிவிருத்தித் தேவைகளையும் நிர்வாகச் சவால்களையும் புரிந்துகொண்டு அவர் செயற்பட்டுள்ளார். திட்டமிடல் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு, அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்த விதம், தரவுகளைத் துல்லியமாகக் கையாளும் திறமை, நிதியை உரிய முறையில் பயன்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தனது கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றியமை ஆகியவை என்றும் பாராட்டத்தக்கவையாகும். அவரது ஓய்வுக்காலம் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் மனநிறைவும் நிறைந்ததாக அமைய வேண்டும். தனது துணைவியார், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து இனிவரும் காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்கவும், எதிர்காலச் செயற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக அமையவும் எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
வாழ்த்துரைகள் :
இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், பிரதி புள்ளிவிபர பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், கணக்காளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களாலும், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களாலும் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டது.
ஒளிப்படம் காட்சிப்படுத்தப்பட்டது :
பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. சுப்பிரமணியம் சிவகுமாரன் அவர்களின் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை தொடர்பான ஒளிப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.
கெளரவிப்பு :
அரசாங்க அதிபர் அவர்களினால் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. சுப்பிரமணியம் சிவகுமாரன் அவர்தம் பாரியார் பொன்னாடை அணிவித்து
கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. மேலும் கிளைகள் ரீதியாக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களாலும் கெளரவிக்கப்பட்டார்கள்.
ஏற்புரை :
இறுதியாக, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் தமது ஏற்புரையில், அரசாங்க சேவையில் தான் கடந்து வந்த நீண்டகாலப் பணிப்பயணம், அக்காலப்பகுதியில் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் ஆற்றிய சேவைகள் தொடர்பில் விரிவாகப் பகிர்ந்துகொண்டார். இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசாங்க அதிபர்களாகப் பணியாற்றிய அமரர் மாணிக்கவாசகர், திரு. பத்மநாதன், அமரர் கணேஷ் மற்றும் தற்போதைய அரசாங்க அதிபர் திரு. பிரதீபன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றக் கிடைத்த வாய்ப்புகள் குறித்தும் குறிப்பிட்டார். அத்துடன், உதவித் திட்டமிடல் பணிப்பாளராக உடுவில், தெல்லிப்பழை மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலகங்களில் கடமையாற்றிய காலப்பகுதியில், பிரதேசங்களின் தேவைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கேற்ப அபிவிருத்தித் திட்டங்களைத் திட்டமிடுதல், அவற்றை நடைமுறைப்படுத்துதல் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பான அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றச் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்த அவர், பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களில் தமக்குக் கிடைத்த அனுபவங்களை எடுத்துரைத்தார். மேலும், யாழ்ப்பாணப் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள், வடிகால் கட்டமைப்புக்களின் அபிவிருத்தி மற்றும் நீர்வழிந்தோடும் பாதைகளைச் சீரமைத்தல் போன்ற உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் தொடர்பான தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, மாவட்டச் செயலகத்தில் பணியாற்றிய காலப்பகுதியில் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் தொடர்பில் குறிப்பிட்ட அவர், மாவட்ட மட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்களை ஒருங்கிணைத்தல், பிரதேச செயலகங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுதல், திட்டங்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல் போன்ற பணிகளில் தாம் ஈடுபட்ட விதம் குறித்தும் எடுத்துரைத்தார். குறிப்பாக, 2026ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரஜாசக்தி வேலைத்திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாகக் குறிப்பிட்ட அவர், இத்திட்டத்தை மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான தம்மால் ஆற்றப்பட்டது பணிகளையும் குறிப்பிட்டார். தமது நீண்டகால அரச சேவையில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்குக் கிடைத்த வாய்ப்புகள், அவற்றின் ஊடாக அடையப்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் பணிகளைச் செயற்படுத்தும்போது எதிர்கொண்ட சவால்கள் ஆகியவை தமக்குப் பெறுமதியான அனுபவங்களாக அமைந்ததாகவும் குறிப்பிட்டார். அரச சேவையில் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வு உள்ளிட்ட அவசியத்தினையும் வலியுறுத்தினார். இறுதியாக, தமது அரச சேவைக் காலப்பகுதியில் ஒத்துழைப்பு நல்கிய அனைவரும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

வட மாகாணப் பாடசாலைகளில் தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கைகள் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் தொழில்சார் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை பத்திரிகைப் பேரவையின் ஏற்பாட்டிலும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் ஒழுங்குபடுத்தலிலும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு இன்று (30.10.2026) காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வின் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் அடைவுகள் தொடர்பான அறிமுக உரையை இலங்கை பத்திரிகைப் பேரவையின் தலைவர் திரு. பிரியான் ஆர். விஜேபண்டா நிகழ்த்தினார்.
அரசாங்க அதிபர் உரை :
ஊடகத்துறையின் வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் ஆசிரியர்கள் பங்களிக்க வேண்டும் – அரசாங்க அதிபர் இச் செயலமர்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், இச் செயலமர்வு யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மாத்திரமன்றி, வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் ஊடகக் கற்கைகள் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பாகும். இதனை ஏற்பாடு செய்த இலங்கை பத்திரிகைப் பேரவைக்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், இங்கு கலந்துகொண்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார். யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரையில், பல மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் ஊடகக் கற்கைகள் பாடத்தை ஆர்வத்துடனும் விருப்பத்துடனும் கற்று வருகின்றனர். இதே நிலைமை வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் காணப்படுகின்றது. அதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் துறை ஆரம்பிக்கப்பட்டு, அதனூடாகப் பட்டப்படிப்பைத் தொடரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும். மேலும், இத்துறையில் கல்வி கற்றவர்கள் மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர். ஊடகங்கள் தொடர்பாகப் பல்வேறு கருத்துகளும் பார்வைகளும் காணப்பட்டாலும், ஊடகக் கற்கையானது மாணவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் ஆளுமையை மேம்படுத்துவதுடன், எதிர்காலத்தில் சமூகத்தில் புதிய மாற்றங்களையும் பரிமாணங்களையும் உருவாக்குவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள் பல்வேறு வடிவங்களிலும் பரிமாணங்களிலும் இயங்கி வருகின்றன. பாரம்பரிய ஊடகங்களுக்கு அப்பால் சமூக ஊடகங்களும் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இத்தகைய சூழலில், பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அதிகளவான மாணவர்கள் ஊடகக் கற்கைகளைத் தெரிவுசெய்து கற்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், இக்கல்வியைப் பெற்றவர்கள் எதிர்காலத்தில் ஊடகத்துறை சார்ந்த பணிகளில் ஈடுபடுவார்களா என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது. பலர் அரச சேவைக்குள் உள்வாங்கப்படும்போது, தாம் கற்ற கல்விக்கும் மேற்கொள்ளும் தொழிலுக்கும் இடையில் தொடர்பற்ற நிலை காணப்படுகின்றது. இதனால், ஊடகத்துறை சார்ந்த செயற்பாடுகளில் அவர்களது பங்களிப்பு குறைவடையக்கூடிய நிலை ஏற்படுகின்றது. எனவே, ஊடகக் கற்கைகளைப் பெற்றவர்கள் தமது துறைசார் அறிவையும் திறன்களையும் நடைமுறைச் செயற்பாடுகளில் பயன்படுத்த முன்வர வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமானதும் பொறுப்புணர்வுமிக்கதுமான ஊடகச் சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும். ஆரம்ப காலங்களில் இத்துறை சார்ந்த பாடங்களைக் கற்பிப்பதற்குத் தேவையான துறைசார் பின்னணியைக் கொண்ட ஆசிரியர்கள் குறைவாகக் காணப்பட்டனர். தற்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு, ஆசிரியர்கள் துறைசார் அறிவையும் திறன்களையும் வளர்த்துக்கொண்டு வருகின்றனர். எனவே, இத்தகைய செயலமர்வுகள் மூலம் கிடைக்கும் அறிவையும் அனுபவங்களையும் உரிய முறையில் பயன்படுத்தி, தமக்குக் கிடைக்கின்ற வளங்களையும் வாய்ப்புகளையும் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். சமூகத்தில் ஊடகங்கள் தொடர்பான புரிதலும் பார்வையும் மேலும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது எனவும், அந்த வகையில், ஆசிரியர்களாகிய நீங்கள் உங்கள் அறிவையும் ஆற்றலையும் தொடர்ந்து வளர்த்துக்கொள்வதுடன், ஊடகத்துறையின் வளர்ச்சிக்கும் அதன் ஊடாகச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் பங்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
வளவாளர்கள் :
இச் செயலமர்வில், “ஊடக ஒழுங்குமுறை மற்றும் கொள்கைகள்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் விரிவுரையாளர் பேராசிரியர் எஸ். ரகுராம் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துரையாற்றினார். அத்துடன், “தற்காலப் போக்குகளின் உண்மை: டிஜிட்டல் ஊடகவியலின் நெறிமுறைகளும் ஊடக விளங்கறிவும்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் திருமதி பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் வளவுரையாற்றினார்.
திறந்தவெளி கலந்துரையாடல் :
இச் செயலமர்வின் இறுதியில் திறந்தவெளிக் கலந்துரையாடலும் இடம்பெற்றது. இதன்போது பங்கேற்பாளர்கள் தமது கருத்துகள், அனுபவங்கள் மற்றும் துறைசார் சவால்களைப் பகிர்ந்துகொண்டனர்.
பங்குபற்றாளர்கள் :
இச் செயலமர்வில் வடக்கு மாகாணப் பாடசாலைகளில் ஊடகக் கற்கைகள் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இலங்கை பத்திரிகைப் பேரவையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.








